படித்து முடித்து வேலைக்காக இளைஞர்கள் அலைந்து திரியும் இன்றைய கால கட்டத்தில் தன்னம்பிக்கையோடு,
மதுரையைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர்களான அசோக் மற்றும் பூபாலன் ஆகிய இருவரும் சுயதொழில் செய்து தங்களது சவால் நிறைந்த வாழ்க்கையில் சாதித்துக் கொண்டிருக்கின்றனர்.
ஒரு சிறிய பை சைக்கிள் மூலமாக பர்கர் ஷாப் ஒன்றை உருவாக்கி மாலை வேளைகளில் வாடிக்கையாளர்களுக்கு நாவுக்கினிய சுவையில் உணவுப் பண்டங்களை வழங்கி தங்கள் பக்கம் ஈர்த்து வருகின்றனர்.
சுயதொழிலில் அசத்தும் பட்டதாரி இளைஞர்கள் மதுரை கே.கே. நகர் லேக் வியூ சாலையில் நாள்தோறும் மாலை 6 மணிக்கு இந்த பை சைக்கிள் பர்கர் ஷாப்பில் கூட்டம் அலை மோதுகிறது. சிறுவர் முதல் பெரியவர் வரை அனைத்து தரப்பினரும் இந்த கடைக்கு படையெடுப்பதை பார்க்க முடிகிறது. சுவை மற்றும் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படும் இந்த சிற்றுண்டி உணவு பண்டத்திற்கு பெரும்பாலானோர் தினசரி விரும்பிகளாகவும் மாறிப்போய்விட்டனர்.
இதுகுறித்து கௌதம் என்ற வாடிக்கையாளர் பேசிய போது, மதுரை மக்கள் எப்போதுமே வித்தியாசமான சுவை நிறைந்த உணவு வகைகளை விரும்பக்கூடியவர்கள் என்றும், பிற கடைகளை விட இந்த பை சைக்கிள் பர்கர் ஷாப்பில் குறைவான விலையில் தரமான சுவையில் பர்கர்கள் கிடைப்பதாக தெரிவித்தார்.
இந்த கடை உரிமையாளர்களில் ஒருவரான அசோக் பேசிய போது, சுயதொழில் செய்து தங்களது வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் வித்தியாசமான முயற்சியின் அடிப்படையில் இந்த பர்கர் ஷாப்பை தொடங்கியதாகவும், குறைவான பர்கர் வகை தான் என்றாலும் கூட அவற்றை சுவையாகவும் உடலுக்கு ஆரோக்கியமாகவும் வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் என்பதே தங்களது தலையாய நோக்கம் என்றார்.
இது பற்றி பேசிய மற்றொரு கடை உரிமையாளரான பூபாலன், படிப்பை முடித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருந்த கால கட்டத்தில் ஏதேனும் தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எழுந்ததாகவும், பிறகு இந்த பர்கர் ஷாப்பை கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருவதாகவும் கூறினார்.
மேலும், குறைவான விலையில் தரமான சுவையில் வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்தப் பை சைக்கிள் பர்கர் ஷாப்பை தொடங்கி வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். தங்களது இந்த முயற்சிக்கு ஆதரவு வலுத்துள்ளதாகவும் தன்னம்பிக்கை இளைஞர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.