தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரை வண்டியூர் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்கக் கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு! - மதுரை மாவட்ட செய்திகள்

மதுரை: வண்டியூர் சுங்கச்சாவடியில் அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்துமுடிக்கும் வரை சுங்கக்கட்டணம் வசூலிக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை
உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை

By

Published : Feb 26, 2020, 11:36 PM IST

மதுரையைச் சேர்ந்த இம்மானுவேல், லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பாக பொதுநல மனுக்கள் தாக்கல்செய்யப்பட்டன. அவற்றில், "மதுரை உத்தங்குடியிலிருந்து கப்பலூர் வரையிலான சுற்றுச்சாலை நான்கு வழிச்சாலை மாற்றப்பட்டுள்ளது. இந்தச் சாலையில் தற்போது வண்டியூர், சிந்தாமணி, வளையங்குளம் ஆகிய மூன்று இடங்களில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு, செயல்படுகின்றன.

மதுரை மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள மேலூர் சிட்டம்பட்டி, தூத்துக்குடி சாலையில் எலியார்பத்தி, திருமங்கலம் சாலையில் கப்பலூர் என மூன்று சுங்கச்சாவடிகள் பல ஆண்டுகளாகச் செயல்பட்டுவருகின்றன.

புதிதாக அமைக்கப்பட்ட மூன்று சுங்கச்சாவடிகளில் வாகனங்களிடமிருந்து 60 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இது நெடுஞ்சாலை ஆணைய விதிகளுக்குப் புறம்பானது.

எனவே 27 கி.மீ. தூரத்தில் மூன்று சுங்கச்சாவடிகள் அமைக்க அனுமதித்த அரசாணையை ரத்துசெய்து உத்தரவிட வேண்டும்" எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுக்கள் இன்று நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந்திரன் அமர்வில் விசாரணைக்கு வந்தது, மனுதாரர் தரப்பில், சுங்கச்சாவடிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. அதற்குச் சுங்கச்சாவடி சார்பில் முன்னிலையான வழக்குரைஞர், நான்கு வாரங்களில் அடிப்படை வசதிகளுக்கான பணிகள் நிறைவடையும் எனத் தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள், "மதுரை வண்டியூர் சுங்கச்சாவடியில் சுங்கக்கட்டணம் வசூலிக்கக் கூடாது. சிந்தாமணி, வளையங்குளம் சுங்கச்சாவடிகளிலும் வண்டியூருக்கென நேரடியாகவோ, மறைமுகமாகவோ கட்டணம் வசூலிக்கக்கூடாது. இந்த உத்தரவை நாளை முதல் அமல்படுத்த வேண்டும்" என உத்தரவிட்டு வழக்கை மார்ச் 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: போகலூர் சுங்கச்சாவடியில் நான்கு வழி சாலைக்கான சுங்க கட்டணம் வசூல் - மாவட்ட ஆட்சியரிடம் மனு

ABOUT THE AUTHOR

...view details