மதுரை கேகே நகரில் உள்ள கிருஷ்ணய்யர் சமுதாயக் கூடத்தில் தமிழ்நாடு தேர்தல் கண்காணிப்பகத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜோசப் விக்டர் ராஜ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவருடன் சோகோ அறக்கட்டளையின் அறங்காவலர் மகபூப் பாஷா, நிர்வாக இயக்குனர் வழக்கறிஞர் செல்வகோமதி ஆகியோர் உடனிருந்தனர்.
அப்போது, விக்டர் ராஜ் கூறுகையில், ’’தமிழ்நாடு சட்டப்பேரவைத் நடைபெறவுள்ள தேர்தலில் 234 தொகுதிகளை சேர்ந்த 3 ஆயிரத்து 998 வேட்பாளர்களில் 3 ஆயிரத்து 559 பேரின் சுய உறுதிமொழி வாக்குமூலங்களை ஆய்வு செய்தோம்.
அதில், 202 வேட்பாளர்கள் தேசிய கட்சிகளை சேர்ந்தவர்கள் 489 வேட்பாளர்கள் மாநில கட்சிகளை சார்ந்தவர்கள். 1001 வேட்பாளர்கள் பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சிகளைச் சார்ந்தவர்கள். 1867 வேட்பாளர்கள் சுயேட்சைகளாக போட்டியிடுகின்றனர்.
ஆய்வில் 3 ஆயிரத்து 559 பேரில் 466 பேர் (13%) மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. 207 பேர் (6%) மீது கொலை, கொலை முயற்சி, திருட்டு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் போன்ற கடுமையான கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இவர்களில், 7 பேர் மீது கொலை வழக்கும் (ஐபிசி 302), 39 வேட்பாளர்கள் மீது கொலை முயற்சி வழக்கும் (ஐபிசி 307) 8 வேட்பாளர்கள் இது பெண்ணை மானபங்கப்படுத்தி தாக்கிய வழக்கும் (ஐபிசி 376) நிலுவையில் உள்ளன.
திமுகவின் 178 வேட்பாளர்களில் 139 பேர் மீதும் (76%) பாஜகவின் 20 வேட்பாளர்களில் 15 பேர் (75%) மீதும், காங்கிரசின் 21 வேட்பாளர்களில் 15 பேர் (71%) மீதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஐந்து வேட்பாளர்களில் மூன்று பேர் (60%) மீதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நான்கு வேட்பாளர்களில் இரண்டு பேர் (50%) மீதும் பாமகவின் 23 வேட்பாளர்களில் 10 பேர் (44%) மீதும் தேமுதிகவின் 60 வேட்பாளர்களில் 18 பேர் (30%)மீதும் அதிமுகவின் 191 வேட்பாளர்களில் 46 பேர் (24%) மீதும் கிரிமினல் வழக்குகள் உள்ளன.
அதேபோன்று, ஆய்வில் 305 பேரும், இதில், 159 வேட்பாளர்களில் 652 பேர் கோடீஸ்வரர்களாவர். 21 காங்கிரஸ் வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு 15.64 கோடி, 20 பாஜக வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு 8.78 கோடி, அதிமுக வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு 9.91 கோடி, திமுக வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு 10.61 கோடி, தேமுதிக வேட்பாளர் களின் சராசரி சொத்து மதிப்பு 3.08 கோடி, பாமக வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு 3.52 கோடி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு 1.03 கோடி. மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு 21.91 லட்சம் ஆகும்.