மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அடுத்துள்ள தொட்டப்பநாயக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் தொட்டப்பநாயக்கனூரிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவ்வப்போது மகப்பேறுக்கான மருத்துவப் பரிசோதனைகளை செய்து வந்தார்.
இந்நிலையில், அவருக்கு சிகிச்சை அளித்துவந்த மருத்துவர்கள் குறிப்பிட்டிருந்த நாளில் அவருக்கு பிரசவ வலி ஏற்படாத காரணத்தால் ரத்தம், சளி உள்ளிட்ட பரிசோதனைகள் அவருக்கு மேற்கொள்ளப்பட்டன.
அப்போது, அவருக்கு கரோனா வைரஸ் பெருந்தொற்று நோய் இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. திருப்பூரில் பணியாற்றும் அவரது கணவர் மூலமாக அவருக்கு இந்த நோய்த்தொற்று ஏற்பட்டது என்பதும் தெரியவந்தது.
பின்னர், அவர்கள் இருவரும் மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் உள்ள கரோனா சிறப்பு வார்டில் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. இதனையடுத்து, கடந்த சில நாள்களுக்கு முன்பாக அந்த பெண்ணுக்கு பிரசவ வலி வந்துள்ளது. அறுவைச் சிகிச்சை மூலம் அப்பெண்ணுக்கு நடைபெற்ற பிரசவத்தில் அழகான பெண் குழந்தை பிறந்தது.