தென்மாவட்டங்களான மதுரை, தேனி, விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அந்தந்த மாவட்டத்தின் கிராமப்புற பகுதிகளில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதனடிப்படையில், மதுரை மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை, மாநகராட்சி இணைந்து வடபழஞ்சி பகுதியில் அமைந்துள்ள தகவல் தொழில்நுட்ப பூங்காவில் 900 படுக்கை வசதிகளுடன் கோவிட் கேர் சென்டர் அமைத்துள்ளது.
இந்த தொழில்நுட்ப பூங்காவில் அமைந்துள்ள மூன்று மாடி கட்டடங்களில் உள்ள அறைகள் அனைத்தும் கரோனா நோயாளிகளுக்காக தனித்தனியாக பிரிக்கப்பட்டு தகுந்த இடைவெளியுடன் படுக்கைகள் அமைத்து சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட உள்ளது. ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் தேவையான 50க்கும் மேற்பட்ட கழிப்பறை மற்றும் குளியலறை வசதிகள், 24 மணி நேரமும் மின்சாரம் கிடைப்பதற்காக ஜென்சட் வசதி செய்யப்பட்டுள்ளது.