மதுரை: மதுரையைச் சேர்ந்த ஹசீனா பேகம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளைகள் மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில் "எனது கணவர் ஜின்னா கோரிப்பாளையம் பகுதியில் மொபைல் கடை நடத்தி வருகிறார். மத்திய புலனாய்வு அமைப்பிடமிருந்து எனது கணவரை விசாரிக்க வேண்டும் என மதுரை மத்திய புலனாய்வு அலுவலகத்திற்கு வரும்படி தெரிவித்தனர்.
அதன் அடிப்படையில் எனது கணவர் விசாரணைக்கு சென்ற போது மத்திய புலனாய்வு அதிகாரிகளும், மாவட்ட துணை காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் ஆகியோர் எனது கணவருக்கும் பாப்புலர் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் இந்தியா நிறுவனத்திற்கும் தொடர்பு இருப்பதாக கூறி கடுமையாக தாக்கி சித்திரவதை செய்துள்ளனர். இதனால் எனது கணவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
எனது கணவரின் தொலைபேசியில் இருந்து வந்த அழைப்பை ஏற்று மருத்துவமனையில் சென்று பார்த்த போது, எனது கணவர் பயங்கர காயங்களுடன் காணப்பட்டார். அவரிடம் விசாரித்த போது மத்திய புலனாய்வு அதிகாரிகள், மற்றும் டிஎஸ்பி செந்தில்குமார் ஆகியோர் விசாரணையில் தங்களை கடுமையாக தாக்கியதாக தெரிவித்தார். மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்ட போது எனது கணவர் விபத்து ஏற்பட்டு அனுமதிக்கப்பட்டதாக கூறுகின்றனர்.