மதுரை: சேலத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவருக்கு வெடிகுண்டு வீசி கொலை செய்த வழக்கில், ஏக காலத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதனையடுத்து மூர்த்தி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு பத்து ஆண்டுகளைக் கடந்த ஆயுள் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.
இதனடிப்படையில் மூர்த்தியை விடுதலை செய்யக் கோரி அவரது மனைவி ஐகோர்ட் மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நேற்று (நவம்பர் 20) நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஜி.ஜெயசந்திரன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அரசு முடிவெடுக்க உத்தரவு
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பேசுகையில், "மனுதாரர் 17 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளார். ஐந்து ஆயுள் தண்டனை என்றாலும், ஏககாலத்தில்தான் அனுபவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆகையால் முன்கூட்டிய விடுதலை கோர முடியும்” என வாதிட்டார்.
இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள், "தண்டனை பெற்றவர்கள் முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்பதை உரிமையாக கோர முடியாது. ஆயுள் தண்டனை என்பது ஆயுள் காலத்திற்கானது. இதில் முன்கூட்டிய விடுதலை என்பது சட்டத்திற்குட்பட்ட அரசின் முடிவைச் சேர்ந்தது.
ஆகையால் ஆயுள் கைதிகளின் முன்கூட்டிய விடுதலை தொடர்பாக, அரசு விரைவில் சிறை விதிகளுக்கு உட்பட்டு பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எடுக்கப்பட்ட முடிவை நீதிமன்றத்தில் தெரியப்படுத்த வேண்டும்” என உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க:Sexual Harassment: குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் சிறப்பு டிஜிபி உச்ச நீதிமன்றத்தில் மனு