மதுரை:மனித நேய மக்கள் கட்சியின் வழக்கறிஞர் அணி செயளாலர் கலந்தர் ஆசிக் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், "ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்களம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமத்தில் இருக்கக்கூடிய மக்கள் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். அந்த கிராமங்களில் இருந்து பொதுமக்கள் காய்ச்சல், விசக்கடி, உள்ளிட்ட முதல் உதவி சிகிச்சைகளுக்காகவும், கர்ப்பிணி பெண்களுக்கான மகப்பேறு சிகிச்சைகளை ஆகியவை RS மங்களம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தான் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த கட்டிடம் கட்டி 30 ஆண்டுகளுக்கு மேல் ஆனதால், தற்பொழுது பலவீனமாக காணப்படுகிறது. அவ்வப்போது மேற்கூரைகள் இடிந்து விழுகின்றன. இதனால் இங்கு பணிபுரியக் கூடிய மருத்துவர்கள், செவிலியர்கள் மருத்துவமனைக்கு வர அஞ்சுகின்றனர். இது தொடர்பாக கடந்த 10 ஆண்டுகளாக பல போராட்டங்களும், மாவட்ட சுகாதார அதிகாரிகளிடம் பல மனுக்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்களம் மேம்படுத்தபட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தினை இடித்து, புதிய சுகாதார நிலையம் கட்டித்தர உத்தரவிட வேண்டும்" என குறிப்பிட்டிருந்தார்.
ஏற்கனவே இந்த வழக்கை விசாரணை செய்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி மருத்துவமனை கட்டிடத்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்து. நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் மாவட்ட நீதிபதி மருத்துவமனை கட்டிடத்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்திருந்தார். அதில் மருத்துவமனை கட்டிடங்கள் சேதம் அடைந்து இருப்பதாகவும், ஆய்வுக்கு வருவது தெரிந்து பல இடங்களில் பூச்சு, பெயின்ட் வேலைகள் நடந்துள்ளதாகவும் அறிக்கையை தாக்கல் செய்திருந்தார்.
மாவட்ட நீதிபதியின் அறிக்கையை சுகாதாரத்துறை செயலாளருக்கு உடனடியாக அனுப்ப கடந்த விசாரணையின் போது நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. மேலும் சுகாதாரத்துறை செயலாளர் தரப்பில் சம்பந்தப்பட்ட கட்டிடத்தை இடித்து கட்டுவதற்கு ஒரு கோடியே 70 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டு இருந்தது.