மதுரை: திருச்சியில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டடத்திற்கு ஆதரவாக செயல்பட்ட அரசு மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் மீது துறைரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து திருச்சி உய்யக்கொண்டான் பகுதியைச்சேர்ந்த சண்முகசுந்தரம், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில்: "திருச்சி ஸ்ரீரங்கம் தாலுகா, உய்யகொண்டான் திருமலைப் பகுதியில் சுமார் 51 சென்ட் நிலத்தில் 100 வீடுகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. இந்த குடியிருப்பு விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளது. சுமார் 54 விழுக்காடு விதிமுறைகளை மீறியுள்ளது. இந்த முறைகேடு குறித்து திருச்சி மாநகராட்சி மற்றும் மாவட்ட அலுவலர்களிடம் நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளித்தும் அலுவலர்கள் கண்டு கொள்ளவில்லை.
எனவே, விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பை இடிக்க வேண்டும். இந்த முறைகேட்டை தடுக்கத் தவறிய அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயணபிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், 'விதிமுறைகளை மீறி கட்டப்படும் கட்டடங்களை முறைப்படுத்துவது மற்றும் இடிப்பது குறித்து உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. ஆனால், அலுவலர்கள் இதனை முறையாக பின்பற்றுவது இல்லை. ஒரு கட்டடத்தை அங்கீகாரம் இன்றி கட்டலாம். பின்னர் அதில் உள்ள குறைபாடுகளை சரிசெய்து கொள்ளலாம் என்ற எண்ணத்தை அலுவலர்கள் ஊக்குவிக்கக்கூடாது.