தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பழனி சிறுவன் மரணம்: காவலர்கள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு! - மதுரை கிளை நீதிமன்றம்

மதுரை : பழனி சிறுவனின் சந்தேகத்திற்கிடமான உயிரிழப்பு தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய வழக்கில் காவல்துறையினர் நாளை (ஜூலை31) பதில் மனு அளிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பழனி சிறுவனின் மரணம் குறித்து காவல்துறையினர் பதில் மனுவை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!
பழனி சிறுவனின் மரணம் குறித்து காவல்துறையினர் பதில் மனுவை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!

By

Published : Jul 30, 2020, 8:19 PM IST

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்துள்ள சின்னகலையம்புத்தூரைச் சேர்ந்தவர் சேதுபதி. இவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அதில், "நானும் எனது மனைவியும் இப்பகுதியிலுள்ள மில் ஒன்றில் வேலை பார்த்து வருகிறோம். எனக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர். இதில் 13 வயதாகும் மகன் இப்பகுதியில் ஒரு பள்ளியில் 7ஆவது படித்து வந்தான். தற்போது பள்ளி விடுமுறை என்பதால் வீட்டிலேயே இருந்துள்ளான். கடந்த 24 ஆம் தேதி நானும் எனது மனைவியும் வேலைக்கு சென்று விட்டோம்.

அங்கிருந்து எனது மூத்த மகளிடம் போன் செய்து எனது மகன் எங்கே என்று கேட்டோம். அதற்கு அவள் காலையில் சென்ற இதுவரை வீடு திரும்பவில்லை எனத் தெரிவித்தார். உடனடியாக நானும், எனது மனைவியும் வீடு திரும்பி அவனை பல இடங்களில் தேடினோம். எங்களால் அவனை கண்டுபிடிக்க முடியவில்லை. மறுநாள் காலையில் அவன் அருகே உள்ள சிட்டிபாபு என்பவரது வீட்டில் பிணமாக கிடந்து கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் அவனின் உடலில் கழுத்து உட்பட பல இடங்களில் காயம் இருந்தது. அவனது கையில் ஒரு புது பிளேடு வைக்கப்பட்டிருந்தது. அவன் மின்சாரம் தாக்கியது போல் எரிந்த நிலையிலும் கிடந்தான். இது குறித்து நாங்கள் பழனி தாலுகா அலுவலக காவல்நிலையத்தில் புகார் அளித்தோம்.

நாங்கள் விசாரித்த போது, சிட்டிபாபுவும் அவனது பெற்றோரும் எனது மகனை காலையிலிருந்து வேலை வாங்கியுள்ளனர். மேலும், இரவு அவனுக்கு உணவு கொடுத்துள்ளனர். அதன் பின்னரும் அவனை வேலை செய்யச் சொல்லி துன்புறுத்தியுள்ளனர்.

ஆனால், அவன் செய்யவில்லை என தெரிகிறது. இதனால் எனது மகனை சிட்டிபாபுவும், அவனது பெற்றோரும் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்து மயக்கமுற்றதால் அவனை தூக்கி சென்று வீட்டின் மாடியிலிருந்து கீழே தள்ளியுள்ளனர்.

இதில் எனது மகன் உயிரிழந்துள்ளான். இதன்பின்னர் அவனை மின்சாரம் தாக்கி உயிரிழந்தது போல சூழ்நிலையை உருவாக்கியுள்ளனர். இதுகுறித்து நான் பழனி தாலுகா காவல் நிலையத்தில் தெரிவித்தபோது அதனை கொலை வழக்காக பதிவு செய்ய கூறிய போது அங்கிருந்த காவல் ஆய்வாளர், இந்த வழக்கில் சிட்டிபாபு மற்றும் அவரது பெற்றோரை காப்பாற்றும் நோக்கில் எனது மகனின் மரணத்தை சந்தேக மரணம் என மட்டுமே பதிவு செய்துள்ளார்.

இதனால் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றிய, வழக்கை சிபிசிஐடி வசம் ஒப்படைக்க வேண்டும். எனது மகனின் உனலை பரிசோதனையை மூன்று மருத்துவர்கள் கொண்ட அமர்வு குழு மீண்டும் உடற்கூராய்வு பரிசோதனை செய்ய வேண்டும் என உத்தரவிட வேண்டும்" என தெரிவித்திருந்தனர்.

இந்த மனு மதுரை கிளை நீதிமன்ற நீதிபதி பொங்கியப்பன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், " உயிரிழந்த சிறுவனின் உடல் பழனி உடற்கூறாய்வு பரிசோதனை கூடத்தில் தற்போது வரை உள்ளது. எனவே, அவனதெ உடலை மீண்டும் கூராய்வு செய்ய வேண்டும்" என கூறினார்.

அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், "சிறுவனின் உடல் ஏற்கனவே விதிமுறைகளின்படி கூறாய்வு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அது முழுவதுமாக காணொலி பதிவு செய்யப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதி, சிறுவனின் மரணம் குறித்து பழனி காவல் நிலைய ஆய்வாளர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சிறுவனின் உடற்கூறாய்வு பரிசோதனை அறிக்கை மற்றும் பரிசோதனையின் போது எடுக்கப்பட்ட காணொலி ஆகியவை உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கை நாளைய (ஜூலை31) தினத்துக்கு ஒத்தி வைத்தார்.

ABOUT THE AUTHOR

...view details