மதுரை:பெட்ரோல் பங்க் உரிமையாளர் தாக்கப்பட்ட வழக்கில், கூடுதல் சட்டப்பிரிவுகளை சேர்த்து முறையாக விசாரிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கருங்குழி காடு பகுதியைச் சேர்ந்தவர் முகமது இப்ராஹிம். பெட்ரோல் பங்க் நடத்தி வரும் இவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அதில், “களக்குடி தோப்பு பகுதியில் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறேன். எனக்கும், நாகுடியைச் சேர்ந்த ராவுத்தர் என்பவருக்கும் இட பிரச்சனை இருந்து வந்தது. இந்த நிலையில், கடந்த மாதம் 27ஆம் தேதி நானும் எனது மேனேஜரும் பெட்ரோல் பங்கில் இருந்தோம். அப்போது ராவுத்தர் மற்றும் சிலர் அங்கு வந்தனர். அப்போது வாய்க்காலை நான் ஆக்கிரமித்துள்ளதாக கூறி, என்னுடன் தகராறில் ஈடுபட்டனர்.
அப்போது, திடீரென அவர்கள் வைத்திருந்த இரும்பு கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் என்னை கடுமையாக தாக்கினர். இதில் நான் பலத்த காயமடைந்தேன். அதையடுத்து அவர்கள் அங்கிருந்து தப்பினர். இது சம்பந்தமாக போலீசில் புகார் அளித்தேன். பின்னர் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தேன்.
அப்போது அங்கு வந்த நாகுடி போலீசார், வெற்று பேப்பர் உள்பட சில தாள்களில் என்னிடம் கையெழுத்து பெற்றனர். அதன் பேரில் எதிர் தரப்பினரான ராவுத்தருக்கு சாதகமாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுவரை அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.