மதுரை: சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மதுரை ஆதீனம் சார்பாக அதன் மேலாளர் தாக்கல் செய்த மனுவில், "மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தெற்கு ஆடி விதியில் திருஞான சம்பந்தர் மண்டபம் உள்ளது. அதில் ஆதீனத்தின் சார்பாக திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள், மாணவர்களுக்கு தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட சைவ சித்தாந்த பாடல்கள் ஓதுவார்கள் மூலமாக பாடசாலை நடத்தப்பட்டு வந்தது.
மேலும் ஆனி மாத உற்சவத்தின் 6 ஆம் நாள் மண்டகப்படியில் இம்மண்டபத்தில் இருந்தே சுவாமி, அம்மன் புறப்பட்டு திருவீதி உலா நடைபெறும். அப்போது திருஞான சம்பந்தர் மதுரையில் நடத்திய அதிசயம் குறித்து மக்களுக்கும், பக்தர்களுக்கும் வரலாறு கூறப்படும் நிகழ்வு நடைபெற்று வந்தது.
அதாவது 291வது ஆதினம் இருக்கும் வரை இவை அனைத்தும் நடைபெற்றன. ஆனால், 292வது அருணகிரி நாதர் ஆதீனம் சன்னிதானமாக இருந்த காலத்தில் இவை நிறுத்தப்பட்டன. இக்காலக்கட்டத்தில், இந்த இடத்தில் எந்த நிகழ்வு நடைபெறவில்லை. இந்நிலையில் கடந்த சில வருடங்களாக கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு லட்டு தாயார் செய்யும் இடமாக மாற்றபட்டுள்ளது.
தற்போது 293வது மதுரை ஆதீனமாக பொறுப்பேற்று இருக்கும் ஞானசம்பந்த தேசிகர் மேற்படி தேவார பாடசாலை, 6ஆம் மண்டகப்படியை மேற்படி மண்டபத்தில் மீண்டும் நடத்த ஏதுவாக, தற்போது லட்டு தயாரிக்கும் இடத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்" என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த மனு நீதிபதி ஸ்ரீமதி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது கோயில் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், இந்த மண்டபத்தில் மனுதாரர் கூறுவது போல, எவ்வித தேவார வகுப்பும் நடைபெறவில்லை. எனவே தற்போது பக்தர்களுக்கு வழங்கும் லட்டு பிரசாதம் செய்து வருவதாக தெரிவித்தார். மனுதாரர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் குறிப்பிட்ட இடத்தில் 1939, 1963, 1985 ஆம் ஆண்டின் திருக்கோயில் வரலாறு, மீனாட்சி கோயில் கும்பாபிஷேக மலர் ஆகிய புத்தகங்கள் சமர்ப்பிக்கப்பட்டது.
அதில் திருஞான சம்பந்த மண்டபம் இருந்ததற்கான சான்றுகள், குறிப்புகள் இருந்தது என்பதற்கான அனைத்தும் ஆவணங்கள் அறிக்கையாக தாக்கல் செய்தார். இதனை பதிவு செய்த நீதிபதி ஶ்ரீமதி, சைவ சமயத்தை பரப்பிய நால்வர்களில் திருஞானசம்பந்தர் முக்கியமானவர் என்றும், இக்கால கட்டத்தில் அனைவரும் தேவராம், திருவாசகத்தை தெரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக இளைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என கருத்து தெரிவித்தார்.
மேலும், கோயில் நிர்வாகம் லட்டு தாயார் செய்யும் இடத்தை வேறு இடத்துக்கு 4 மாதத்தில் இடமாற்றம் செய்ய வேண்டும். இந்த இடத்தை மதுரை ஆதீனம் பாடசாலை நடத்த இடமளிக்க வேண்டும் என்றும், வழக்கம் போல மாசி திருவிழாவின் 6ம் நாள் மண்டகப்படியை அதே மண்டபத்தில் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
இதையும் படிங்க: "தமிழ் என்ன துக்கடாவா?" மதுரை மீனாட்சிக்கே இந்த நிலைமையா? - பாலாலயத்தில் சமஸ்கிருதம் ஏன் என கேள்வி!