கரோனா பரவல் குறித்து, பொதுமக்களும் மாவட்ட நிர்வாகமும் எச்சரிக்கையுடன் செயல்பட மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் இன்று (ஏப்ரல் 23) எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ’’மதுரை மாவட்ட நிர்வாகத்திற்கும், பொதுமக்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் என்னும் முறையில் என்னுடைய வேண்டுகோளினைச் சமர்ப்பிக்கிறேன். நமது மாவட்டத்தில் நோய்த்தொற்றின் வேகம் தீவிரமடைந்து கொண்டிருக்கிறது. நோயப்பரவலின் வேகம் கடந்த வாரம் 6.34%ஆக இருந்தது இந்த வாரம் 7.17%ஆக உயர்ந்துள்ளது.
இதையடுத்து, நோய்த்தொற்றுக்கு உள்ளாகிறவர்களின் தினசரி எண்ணிக்கை 500யைக் கடந்துகொண்டிருக்கிறது. இந்த வேகத்தைக் கட்டுப்படுத்தப்படவில்லை என்றால் அடுத்த வாரம் நமது மாவட்ட மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைக்காத நிலை உருவாகும். அதற்கான முன்னெச்சரிக்கை தீவிரமாக நடந்து வருகிறது. மேலும், மருத்துவ முகாம் தற்போது 240ஆக இருப்பதை உடனடியாக 400ஆக உயர்த்த வேண்டும்.