தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வெடித்த கிருமிநாசினி கருவி: அரசின் அலட்சியத்தால் பார்வையை பறி கொடுத்த தூய்மைப் பணியாளர்!

மதுரை: கரோனா தடுப்பு பணிகளின்போது திடீரென கிருமிநாசினி தெளிப்பு கருவி வெடித்ததில், தூய்மைப் பணியாளர் ஒருவர் பலத்த காயமடைந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கண் பார்வை பறி போனதாக அவர் தெரிவிக்கிறார்.

By

Published : Nov 19, 2020, 7:13 AM IST

மதுரை மாநகராட்சி
மதுரை மாநகராட்சி

மதுரை மாநகராட்சியில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றும் மாரிமுத்து, நேற்று (நவ.18) கரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடும்போது கிருமிநாசினி தெளிக்கும் கருவி வெடித்ததில் பலத்தக் காயமடைந்தார். தல்லாகுளம் பகுதியில் கரோனா வைரஸ் தொற்று தடுப்புக்காக ஈடுபட்டிருந்த இவர், கிருமி நாசினி தெளிக்கும் கருவியின் மூடியைத் திறந்துள்ளார். எதிர்பாராதவிதமாக அந்த இயந்திரம் வெடித்துள்ளது.

தடுப்பு பணியில் ஈடுபடும் போது கொடுக்கப்பட வேண்டிய எவ்வித உபகரணங்களும் மாரிமுத்துவிடம் இல்லாததால், கிருமிநாசினி இயந்திரம் வெடித்ததும் அவர் முகம் முழுவதும் கிருமிநாசினி பட்டதில் முகம் வெந்து படுகாயமடைந்தார்.

அந்த வேளையில் உடனிருந்த சக பணியாளர்கள் மாரிமுத்துவை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதைத்தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாநகராட்சி நிர்வாகம் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காததால் தனக்கு நேர்ந்த விபத்தில் கண் பார்வை பறி போனதாக மாரிமுத்து புகார் தெரிவித்துள்ளார்.

கிருமிநாசினி கலக்கும் பிளாஸ்டிக் டேங்க்கை திறந்தபோது அதிலிருந்து வாய்வு அதிக அழுத்தத்துடன் வெளியேறியதாகத் தெரிவிக்கும் சுகாதாரத்துறை அலுவலர்கள், இது தான் மாரிமுத்து காயமடையக் காரணம் எனவும் விளக்கம் அளித்துள்ளனர்.

மாரிமுத்துவிற்கு உரிய சிகிச்சை அளிக்க ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாரிமுத்து உள்ளிட்ட அனைத்து பணியாளர்களுக்கும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கருவிகள் அனைத்தும் தரமானது என்பதில் எவ்வித சந்தேகம் இல்லை எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:ஒரு வாரமாக பால் வடியும் வேப்பமரம் - ஆர்வத்துடன் காணும் மக்கள்

ABOUT THE AUTHOR

...view details