மதுரை:ஒமைக்ரான் வைரஸ் தற்போது உலக நாடுகளையே அச்சுறுத்திவரும் நிலையில், மதுரை அருகே கரோனாவின் பெயரில் கரோனா பால் விற்பனை செய்து அசத்திவருகிறார் சாலமோன் ராஜ். சீனாவிலிருந்து பரவிய கரோனா பெருந்தொற்று, உலக நாடுகளை கடந்த இரண்டு ஆண்டுகளாக ஸ்தம்பிக்கச் செய்துள்ளது.
இந்நிலையில், அதற்கான தடுப்பூசிகளின் மூலமாக மெள்ள மெள்ள இயல்பு நிலைக்கு உலகமே திரும்பிக் கொண்டிருக்கிறது. கரோனா வைரசிலிருந்து உருமாறிய ஆல்ஃபா, பீட்டா, டெல்டா, டெல்டா பிளஸ், காமா எனப் பல்வேறு வைரஸ்கள் பல்வேறு வகையில் அச்சுறுத்திவருகின்றன.
சாயா கருப்பட்டி காபி கடை - கரோனா பால்
இந்நிலையில் மதுரை மாவட்டம் அச்சம்பத்து அருகே சாயா கருப்பட்டி காபி என்ற கடையில் கரோனா பால் தற்போது வாடிக்கையாளர்களால் மிகவும் விரும்பி அருந்தப்படுகிறது. இது குறித்து கடையின் உரிமையாளர் சாலமோன் ராஜ் கூறுகையில், "கருப்பட்டியை மூலப்பொருளாக வைத்து குளம்பி (காபி), தேநீர், பால் என விற்பனை செய்துவருகிறோம்.
இது நமது பாரம்பரியமான முறையாகும். சீனி பயன்படுத்தும் நடைமுறை மிகவும் பிற்காலத்தில் வந்த ஒன்றாகும். ஆனால், அது நமது உடலுக்கு கேடு விளைவிப்பது. ஆனால், பனங்கருப்பட்டி, நமது உடலுக்குத் தேவையான சுண்ணாம்புச் சத்து மட்டுமன்றி நோய் எதிர்ப்பு ஆற்றலையும் வழங்கவல்லது.