மதுரை:மதுரையின் அட்சயபாத்திரம் அமைப்பு சார்பில் சாலையோர வாசிகளுக்கும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு இன்றுடன் 250 ஆவது நாள் ஆவதை ஒட்டி இன்று முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மதுரை ரயில் நிலையம் எதிரே முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் இலவச உணவு வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "கரோனா ஊரடங்கான இன்று மதுரையில் சாலையோர வாசிகளுக்கு தன்னார்வ அமைப்பால் இலவசமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது நோய் தொற்று அதி தீவிரமாக பரவி வருகிறது. தமிழக அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. ஆனால் இந்த ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு அடிப்படையாக தேவைப்படுவது உணவுதான்.
கரோனா அச்சத்தால் தற்கொலை
ஐ. சி. எம். ஆர். மற்றும் மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளில் கூறுவது தொற்று பாதிக்கப்பட்டவர்களை 7 நாட்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்த வேண்டும் என்பது தான். அப்படி வீட்டில் தனிமைப்படுத்தி கொண்ட போது, கரோனா அச்சம் காரணமாக விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
ஆர் பி உதயகுமார் கோரிக்கை கடந்த காலங்களில் இப்படி நோய்த்தொற்று ஏற்பட்ட நேரத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு என மாவட்ட நிர்வாகம் சார்பில் உதவியாளர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் அக்குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் காய்கறிகள் உணவு மருந்து மாத்திரை உள்ளிட்ட சேவைகளை செய்து கொடுத்தார்கள்.
ஏனென்றால் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழ்நிலை இருக்கும். ஆகவே தங்குதடையின்றி அவர்களுக்கு உணவு கிடைப்பதற்கு கடந்த அதிமுக ஆட்சியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.மேலும் அம்மா உணவகம் மூலம் தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டது.
உதவித்தொகை
கடந்த ஆட்சியில் ஊரடங்கு காலத்தில் 2500 ரூபாய் ரொக்கப்பணம் வழங்கினோம். பொங்கல் தொகுப்பு, நிவாரண பணம் வழங்கி வந்தோம். தற்போது ஊரடங்கு காலத்தில் கிடைக்க வேண்டிய நிவாரணம், பொங்கல் நிவாரணம் இப்படி எதுவும் கிடைக்காத காரணத்தால் சக்கிமங்கலத்தில் ஒரு குடும்பமே விஷம் அருந்தி தற்கொலை முயற்சி செய்து தாயும் - மகனும் உயிரிழந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்த குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும்" என ஆர்பி உதயகுமார் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க:ஊரடங்கு காரணமாக நேற்று ஒரே நாளில் எத்தனை கோடிக்கு மதுவிற்பனை நடந்தது தெரியுமா?