மதுரை: வடக்கு மாவட்ட திமுக சார்பில் பதவி பெற வேண்டுமெனில் குண்டாஸ் பெற்றவராக இருக்கவேண்டும் என அறிவிப்பு செய்து ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாநகரின் வடக்கு மாவட்ட திமுக சார்பில் பதவிகள் விற்பனைக்கு உள்ளது என சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் ஒவ்வொரு விதமான பதவிக்கும் விலை வேறு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பதவியை பெறுவதற்கான தகுதிகளுள் ஒன்றாக குண்டாஸ் பெற்றவராக இருப்பதும் அவசியம் என அச்சுவரொட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாவட்ட இளைஞரணி பொறுப்பிற்கு ரூ.5 லட்சமும், மாவட்ட பகுதி செயலாளருக்கு ரூ.3 லட்சமும், மாநகர் வடக்கு மாவட்ட பிரதிநிதி பொறுப்பிற்கு ரூ.3 லட்சமும், வடக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பிற்கு ரூ.2.5 லட்சமும் கட்டவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பணம் இருந்தால் மட்டுமே இங்கு பதவி உண்டு, அவர் அந்த பகுதியை சேர்ந்தவராக இருக்க வேண்டிய அவசியமில்லை, கட்சியில் உழைத்தவனுக்கு ஒன்றுமில்லை. பணம் இருந்தால் கட்டாயம் பதவி கிடைக்கும் எனவும் அந்த சுவரொட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்டவற்றை எல்லாம் குறிப்பிட்டுவிட்டு அச்சுவரொட்டியின் கீழே இப்படிக்கு மதுரை மாநகர் மாவட்ட திமுகவின் உண்மை தொண்டர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளுங்கட்சியாக திமுக இருப்பதால், பதவிக்கு போட்டி ஏற்பட்டுள்ளது. கட்சிக்கு உழைத்தவர் தவிர்த்து, தற்போது பணம் உள்ளவர்களுக்கு பதவி கொடுப்பதால் இது போன்று திமுகவினரில் சிலர் தங்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்தி உள்ளதாக அக்கட்சியின் பொறுப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சுவரொட்டி மதுரை மாநகர் முழுவதும் திமுகவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா பயணம்