மதுரையைச் சேர்ந்த வெள்ளைதுரை என்பவர் மதுரை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்தார். அதில், "தற்போது கரோனா தொற்று காலமாக இருப்பதால் மத்திய- மாநில அரசுகள் தொடர்ந்து பேரிடர் காலமாக அறிவித்துள்ளது. பொது மக்களின் வாழ்வாதாரம் கருதி ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகள் நிபந்தனைகளுடன் தமிழ்நாடு அரசு அறிவித்தது.
இந்நிலையில் பொதுக்கூட்டம் அரசியல் நிகழ்ச்சிகளில் 200 நபர்களுக்கு மேல் அனுமதி இல்லை என அரசு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. ஆனால் ஒத்தக்கடையில் முத்தரையர் வாழ்வுரிமை மாநாடு நடைபெறக் கூடிய கூட்டத்தில் 25 ஆயிரம் நபர்கள் கலந்து கொள்ள மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. எனவே பேரிடர் காலத்தை கருத்தில் கொண்டு இந்த கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு அவசர வழக்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு பல்வேறு நிபந்தனைகளை சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும். வேறு சமுதாயம் குறித்து விமர்சனம் செய்து பேசக் கூடாது. கூட்டம் முழுதும் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என விதிமுறைகள் விதித்து கூட்டம் நடத்த அனுமதி அளித்து உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.