மதுரை: எஸ்.எஸ்.காலனியில் நேற்று (ஜூன் 7) பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது பேசிய ஹெச்.ராஜா பேசுகையில், "இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராக சேகர்பாபு தொடரக் கூடாது. தன்னைக் கிறிஸ்தவராக எண்ணிக் கொள்ளும் சேகர்பாபு, இந்து சமய அறநிலையத் துறையில் அமைச்சராக நீடிப்பது சரி அல்ல. அவருக்குப் பதிலாக கே.என்.நேருவை அறநிலையத் துறை அமைச்சராக நியமிக்கலாம். அவர் நல்ல வைஷ்ணவர். அவர் கடவுளுக்கு துரோகம் செய்ய மாட்டார்.
இந்து அறநிலையத் துறைக்குச் சொந்தமான நிலங்களை இந்து மத சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு அன்றி வேறு எதற்காகவாவது பயன்படுத்தப்பட்டால், அதன் பெயரில் நிச்சயமாக வழக்கு தொடுப்போம். அவ்வாறு செயல்களில் தொடர்புடையவர்கள் அந்த வழக்கை நிச்சயம் எதிர்கொண்டாக வேண்டும்.
தமிழ்நாடு மாநிலக் கல்வி தரத்தில் குறைபாடு உள்ளது. எனவே, அது தொடர்பாக இன்றை காலகட்டத்தில் இளைஞர்களுக்கு கல்விக்கு ஏற்ற வேலை கிடைப்பதில்லை. நவீன காலத்திற்கு ஏற்ப கல்வி முறைகளை மாற்றி அமைக்க வேண்டும் என ஆளுநர் பேசியதில் தவறில்லை. முதலமைச்சர் ஸ்டாலின் தனது மாப்பிள்ளை சபரீசனை காப்பாற்றவே வெளிநாடு சுற்றுலா சென்றார். எனவே, முதலமைச்சர் ஸ்டாலின் வெளிநாடுகளுக்கு சென்றது முதலீடுகளை ஈர்ப்பதற்காக அல்ல.
ஒடிசாவில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் உள்பட 3 ரயில்கள் விபத்துக்கு பொறுப்பேற்று பிரதமரை பதவி விலக சொல்பவர்கள், ஏன் விழுப்புரம் கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை பதவி விலக சொல்லவில்லை? தமிழ்நாடு டாஸ்மாக்கிலேயே கள்ளச்சாராயம் விற்கின்றனர்.