தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எங்கள் கூட்டணி குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கவலைப்பட வேண்டாம் - எம்பி கார்த்திக் சிதம்பரம்

மதுரை: திமுக - காங்கிரஸ் கூட்டணி குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கவலைப்பட வேண்டாம். அவர்கள் பத்து வருடம் செய்த அவலத்தை மக்களிடம் எடுத்துச் சொல்லி ஓட்டு வாங்குகிறார்களா என்று பார்ப்போம் என எம்பி கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

MP Karti Chidambaram
எம்பி கார்த்திக் சிதம்பரம்

By

Published : Feb 26, 2021, 12:53 PM IST

மதுரை விமான நிலையத்திற்கு நேற்று வந்த சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

அப்போது பேசிய அவர், “மனிதநேயம் இல்லாத அரசு இது. சேவை செய்பவர்களிடம் மனிதாபிமானத்தோடு நடந்து கொள்ள வேண்டும். அவர்களின் இடைக்கால பட்ஜெட்டை பார்த்தாலே தெரியும் அவர்கள் எவ்வளவு கடன் வாங்கி செய்திருக்கிறார்கள் என்று. இது ஒரு பொருளாதார சீர்கேடு. இதற்கு தமிழ்நாடு அரசும் மத்திய அரசும்தான் காரணம்.

பாஜக நேரடியாக வெற்றியடையாத மாநிலங்களில் குறிப்பாக கோவாவில் தேர்தலில் தோற்றுவிட்டு பின்னர் எம்எல்ஏக்களை தூண்டி ராஜினாமா செய்ய வைப்பது. அதன் பின்னர் ஆளுநர் மூலமாக புதிதாக ஆட்சி அமைக்க முயற்சி செய்வது, அதில் தோல்வியடைந்தால் ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வருவது, இதைப் போலத்தான் இவர்கள் மத்திய பிரதேசத்திலும், கர்நாடகாவிலும் செய்திருக்கிறார்கள்.

எம்பி கார்த்திக் சிதம்பரம்

நேரடியாக மக்களை சந்தித்து பிரதிநிதிகளை முன்னிறுத்தி தேர்தலில் வெற்றிபெற தவறும்பட்சத்தில், இத்தகைய மறைமுக வேலைகளை அவர்கள் செய்வதை வன்மையாக கண்டிக்கின்றேன். இரண்டாவது, எப்பொழுதும் பாஜக எங்களுக்கு அடிப்படையில் இருந்தே தொண்டர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால் எதற்காக காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகளில் இருந்து அரசியல் பிரமுகர்களை அவர்கள் கட்சியில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அவர்களுக்கு தலைவர்கள் கிடையாதா அவர்கள் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் மூலமாக மக்களை மக்களால் ஏற்றுக்கொள்ளக் கூடிய நபர்கள் வரவில்லையா? இது பாஜகவின் பொது யுக்தி.

புதுச்சேரி வளர்ச்சியடைய வேண்டும் என்பதற்காக 2 பேரை ராஜினாமா செய்ய வைத்து அவர்கள் கட்சியில் சேர்க்கவில்லை ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக. நேரடியாக முடியவில்லை, முடியாவிட்டாலும் குறுக்கு வழியில் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக செய்துள்ளனர்.

இன்னும் நான்கு வாரங்களில் தேர்தல் வரவிருக்கும் நிலையில் இதற்காக இந்த கொலைவெறி. துணைநிலை ஆளுநரை இரவோடு இரவாக மாற்றி பொதுவாக தமிழ்நாட்டில் இருக்கும் ஆளுநரைத்தான் புதுச்சேரி துணைநிலை ஆளுநராக நியமிப்பார்கள் சென்னையில் இருந்து 2 மணி நேரத்தில் பாண்டிச்சேரி செல்லக்கூடிய ஆளுநரை விட்டுவிட்டு தெலங்கானாவிலிருந்து புதுச்சேரிக்கு ஆளுநரை நியமித்துள்ளனர்.

முன்னதாக தமிழ்நாட்டில் அரசியல் செய்தவரை நியமித்துள்ளனர். இவர்கள் புதுச்சேரி நலன், தொழில் வளர்ச்சிக்காக செய்கிறோம் என்று சொல்வதெல்லாம் உண்மை அல்ல. எப்படியாவது மறைமுகமாக ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக செய்கிறார்கள். ஆனால் மக்கள் இதற்குத் தெளிவாக தீர்ப்பு அளிப்பார்கள் என்று நம்புகிறேன்.

அமைச்சர் ஜெயக்குமார் எதற்காக எங்கள் கூட்டணி பற்றி பேச வேண்டும். அவர்கள் ஆட்சியில் இருக்கப்போவது இன்னும் நான்கு வாரங்களோ, ஆறு வாரங்களோ அதை மட்டும் அவர் எண்ணினால் போதும். எங்கள் கூட்டணி பற்றி கவலைப்பட வேண்டாம், எங்கள் கூட்டணி வலுவாக இருக்கிறது.

இன்று(பிப்.25) எங்கள் மேலிட பார்வையாளர்கள் திமுகவுடன் பேச்சுவார்த்தையில் இறங்கியிருக்கிறார்கள். நிச்சயமாக எங்கள் கூட்டணி வெற்றி பெறும். அதை பற்றி அவர் கவலைப்பட வேண்டாம். அவர்கள் பத்து வருடம் செய்த அவலத்தை மக்களிடம் எடுத்துச் சொல்லி ஓட்டு வாங்குகிறார்களா என்று பார்ப்போம்.

சரத்குமார் கட்சி பற்றியோ அவர் கூட்டணி பற்றியோ எதுவும் எனக்குத் தெரியாது. ஆனால் நான் இன்றைக்கும் திருப்பி சொல்கிறேன் தேர்தலுக்கு முன்பாகவோ தேர்தலுக்கு பின்பாகவோ ஒட்டுமொத்த அண்ணா திராவிட முன்னேற்ற கழகமும் சசிகலாவிடம் சென்று சரண் அடையும் என்பதில் தெளிவாக உள்ளேன். அது நடந்தால் எனக்கு விருந்து வையுங்கள்” என்றார்.

இதையும் படிங்க: திமுக-காங்கிரஸ் கூட்டணி ஊழல் அரசியலை மேற்கொள்கிறது - பிரதமர் நரேந்திர மோடி !

ABOUT THE AUTHOR

...view details