மதுரை:மதுரை காமராசர் பல்கலைக்கழக ஆட்சிப்பேரவைக் கூட்டம் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மு.வ.அரங்கில் இன்று(ஆக 12) நடைபெற்றது. இதில் துணைவேந்தர் ஜெ.குமார் தலைமை வகித்தார். கடந்த ஆட்சிப்பேரவைக் கூட்டத்துக்குப் பின்னர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் தொடர்பாக துணைவேந்தர் ஜெ.குமார் அறிக்கை வாசித்தார்.
இதைத்தொடர்ந்து ஆட்சிக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டது. இதில் பல்கலைக்கழகத்தில் உள்ள துறைகளில் முதுகலை படிப்புகளுக்கு குறிப்பிட்ட சில துறைகளில் மட்டும் நுழைவுத்தேர்வு நடத்தி மாணவர் சேர்க்கை நடத்துவது. இதர துறைகளில் இளங்கலை படிப்பில் மாணவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடத்துவது.
பல்கலைக்கழகத்தில் 2022-23 கல்வி ஆண்டில் புதிய இளங்கலை படிப்புகளாக பிஏ கூட்டுறவு (தமிழ் மற்றும் ஆங்கில வழி), கணினி அறிவியலில் செயற்கை நுண்ணறிவு, கிளவுட் கம்யூட்டிங் சைபர் செக்யூரிட்டி, அனிமேசன் மற்றும் கேம் டிசைனிங் ஆகிய பிரிவுகளில் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் நடத்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கேள்வி நேரத்தில் ஆட்சிப்பேரவை உறுப்பினர்கள் பலர் பேசினர். உறுப்பினர் வேளாங்கண்ணி ஜோசப் பேசும்போது,
”பல்கலைக்கழக துணைவேந்தர் தேர்வில் கலை மற்றும் அறிவியல் துறையில் இருந்து துணைவேந்தர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று கல்விப்பேரவைக் கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதை தவறாகப் புரிந்துகொண்டு துறைத்தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்று மிரட்டல் விடுக்கப்படுகிறது. பல்கலைக்கழக துறைத்தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரையும் கண்ணியத்துடன் நடத்துவதை பல்கலைக்கழக நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்” என்றார்.
மேலும், ”பல்கலைக்கழக நிதி நிலைமை மிகவும் மோசமாக உள்ளதால் மாத ஊதியமும் தாமதமாக வழங்கப்படுகிறது. நிதி நிலையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்கலைக்கழகத்தில் பதிவாளர், தேர்வாணையர் உள்ளிட்ட பொறுப்புகளில் 6 மாதத்துக்கு ஒரு முறை சுழற்சி முறையில் மூத்த பேராசிரியர்களை நியமிக்க வேண்டும். ஆட்சிப்பேரவை மற்றும் கல்விப்பேரவையில் இருந்து ஆட்சிக்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் வகையில் தேர்தல் நடத்த வேண்டும்” என்றார்.