தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முடிவுபெறாத மதுரை பெரியார் பேருந்து நிலைய பணிகள்: ஆணையர் நேரில் ஆஜராக உத்தரவு

சீர்மிகு நகரம் திட்டத்தின்கீழ் மதுரை பெரியார் பேருந்து நிலைய பணிகள் இன்னமும் முடிக்கப்படாதது குறித்து மதுரை மாநகராட்சி ஆணையர் நேரில் முன்னிலையாகி விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

MDU
MDU

By

Published : Nov 12, 2021, 4:14 PM IST

மதுரை: உத்தங்குடியைச் சேர்ந்த சர்க்கரை முகமது என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றைத் தாக்கல்செய்திருந்தார்.

அதில், "சீர்மிகு நகரம் திட்டத்தின்கீழ் பெரியார் பேருந்து நிலையத்தை அமைப்பதற்காக ரூ. 159.70 கோடி நிதி ஒதுக்கீடுசெய்யப்பட்டது. இன்னமும் பெரியார் பேருந்து நிலையம் முழுமையாகக் கட்டி முடிக்கப்படாததால் ஓட்டுநர்கள், அன்றாடம் கூலி வேலை செய்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

ஆகவே விரைவாக சீர்மிகு நகரம் திட்டத்தின்கீழ் பெரியார் பேருந்து நிலையத்தை கட்டி முடிக்கக் கோரி வழக்குத் தாக்கல்செய்யப்பட்டது. இந்த வழக்கில் மதுரை மாநகராட்சித் தரப்பில், 2021 மார்ச் 31ஆம் தேதிக்குள்ளாகப் பணிகள் முடிக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் இன்றுவரை பணிகள் நிறைவடையவில்லை. ஆகவே, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இன்று வழக்கை விசாரித்த நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வு, 2021 மார்ச் 31ஆம் தேதிக்குள்ளாக சீர்மிகு நகரம் திட்டத்தின்கீழ் மதுரை பெரியார் பேருந்து நிலைய பணிகள் முடிக்கப்படும் என மதுரை மாநகராட்சித் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டிருந்த நிலையில் இன்னமும் பணிகள் முடிக்கப்படாதது ஏன்? எனக் கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து, மதுரை மாநகராட்சி ஆணையர் நேரில் முன்னிலையாகி விளக்கமளிக்க உத்தரவிட்டு, வழக்கை டிசம்பர் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: சந்தேகத்திற்கு இடமாக இளம்பெண் இறப்பு குறித்த வழக்கு - பதில் மனு தாக்கல் செய்ய காவல் துறைக்கு உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details