மதுரை:மதுரை மாநகராட்சியில் கடந்த பல ஆண்டுகளாக நிலவி வரும் கடும் நிதி நெருக்கடியால் போதுமான வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை உள்ளதாக மக்கள் பிரதிநிதிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். நிலுவையில் உள்ள வரிகளை வசூல் செய்தால் மட்டுமே மாநகராட்சியின் பணிகள் தொய்வின்றி நடைபெறும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவம் மதுரை மாநகராட்சிக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. மதுரை மாநகராட்சிக்கு உள்பட்ட பல்வேறு வார்டுகளில் கட்டிடங்களுக்கு உரிய வகையில் வரி விதிப்பு செய்யப்படாமல் உள்ளதாகவும், இதனால் மாநகராட்சி நிர்வாகத்துக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது எனவும் மேற்கண்ட வார்டுகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டிடங்களுக்கு வரிவிதிப்பில் முறைகேடு நடந்துள்ளதாகவும் முறைமன்ற நடுவம் குற்றம் சாட்டியுள்ளது. இதற்கு மாநகராட்சி அலுவலர்களின் மெத்தனப்போக்கே காரணம் எனவும் அது சுட்டிக் காட்டியுள்ளது.
இதனை உடனடியாக ஆய்வு செய்து வரி விதிப்புகளை முறை செய்வதோடு, வரிவிதிப்பினை அதிகரித்து மாநகராட்சியின் வருவாய் இழப்பை ஈடுகட்ட வேண்டும் என முறைமன்ற நடுவம் மதுரை மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த நடவடிக்கைகள் பற்றி 45 நாட்களுக்கு அறிக்கை தாக்கல் செய்யவும் நடுவம் தற்போது ஆணையிட்டுள்ளது.
இந்நிலையில் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் சொத்து வரி, குடிநீர் வரி, பாதாளச் சாக்கடை பராமரிப்பு கட்டணம், தொழில்வரி மற்றும் வரியில்லா இனங்கள் ஆகியவை கீழ்க்கண்டவாறு நிலுவையில் உள்ளது. சொத்து வரி ரூ.140 கோடி, காலி மனை வரி ரூ.42 கோடி, தொழில் வரி ரூ.22 கோடி, குடிநீர் கட்டணம் ரூ.18 கோடி, வரி இல்லா இனங்கள் ரூ.90 கோடி, பாதாளச் சாக்கடை பராமரிப்பு கட்டணம் ரூ.70 கோடி ஆக மொத்தம் 380 கோடி தற்போது நிலுவையாக உள்ளது.
பிரதமரின் குடிசை மாற்றுத் திட்டத்தின் கீழ் கடந்த 2015-16 முதல் 2021-22 வரை மாநகராட்சி எல்லைக்குள் சுமார் ஒரு லட்சம் கட்டிடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இதில் 25 ஆயிரம் கட்டிடங்களுக்கு மட்டுமே மாநகராட்சியால் வரிவிதிப்பு செய்யப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சியில் வீட்டு வரி கட்டாத முதல் 200 இடத்தில் இருக்கக் கூடிய நபர்களின், வரி வசூலாகா நிலுவைத் தொகை ரூ.20 கோடி. கடந்த 2015-16ஆம் ஆண்டு முதல் 2021-22ஆம் ஆண்டு வரை சுமார் ஏழாயிரத்து 500 கட்டிடங்களும், வரைபட அனுமதி பெறாமல் பல நூறு கட்டிடங்களும் கட்டப்பட்டுள்ளன. இதுபோன்ற சுமார் 5 ஆயிரம் கட்டிடங்களுக்கு மேல் தற்போது வரை வரிவிதிப்பு செய்யப்படவில்லை. மதுரை மாநகராட்சி உள்ளாட்சி நிதி தணிக்கை அறிக்கையின்படி, சுட்டிக்காட்டப்பட்டுள்ள தணிக்கை தடைகளை விரைவாக முடிக்கும் நிலையில் மிகப்பெரிய தொகை மாநகராட்சிக்கு வருவாயாகக் கிடைக்கும் வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால் நிலுவையிலுள்ள வரிகளை வசூல் செய்யவும், கூடுதலாக வரி விதிக்கக்கூடிய வாய்ப்புள்ள இனங்களைக் கண்டறிந்து அதன்படி வரி விதிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் கோரிக்கை வலுத்துள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து மதுரை மாநகராட்சி ஆணையர் மதுபாலன் கூறுகையில், வரி வசூல் மையங்களில் வரி வசூல் செய்யும் பொறுப்பு தனியார் வங்கியின் பங்களிப்போடு மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்குக் காரணம் பணியாளர் பற்றாக்குறையே. 47 மையங்கள், 5 மண்டல அலுவலகங்களில் சொத்து வரி உட்பட அனைத்து வரிகளையும் டிஜிட்டல் முறையில் செலுத்தும் வகையில் வரி இனங்களை வசூலிக்கத் தனியார் வங்கியின் பங்களிப்புடன் வசூலிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல் ஒவ்வொரு பில் கலெக்டரும் முதல் முப்பது வரி செலுத்தாத நபர்களின் பட்டியலைச் சேகரித்து அவர்களிடம் இருந்து வரியை வசூலிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:"பி.சுசீலாவின் குரலில் மயங்கியவர்களில் நானும் ஒருவன்" - பாட்டு பாடி பாராட்டிய முதலமைச்சர்