மதுரை:குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரி வரலாற்றுத் துறை சார்பில் தமிழ் எழுத்துகளின் வளர்ச்சி மற்றும் கோயில் கட்டடக்கலை சிறப்புகள் என்ற தலைப்பில் இரண்டு நாள் பயிலரங்கம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ஜெய்நிலா சுந்தரி தலைமை வகித்தார். வரலாற்றுத்துறை தலைவர் முனைவர் அமிர்தவல்லி அனைவரையும் வரவேற்றார்.
முதல் நாள் நிகழ்வில் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, தமிழ் எழுத்து கி.மு 6-ம் நூற்றாண்டிலிருந்து எவ்வாறு வளர்ச்சியடைந்தது என்பதை மதுரை யானைமலை, விக்கிரமங்கலம், அழகர்மலை உள்ளிட்ட மலைக்குகைகள், பானை ஓடுகள், காசுகள், முத்திரைகளில் உள்ள தமிழி எழுத்துகள், கோயில் கல்வெட்டுகள் ஆகியவற்றின் படங்கள் மூலம் தமிழி மற்றும் தமிழ் எழுத்துகளை எழுதவும் கல்வெட்டுகளைப் படிக்கவும் பயிற்சியளித்தார்.
இரண்டாம் நாள் நிகழ்வில் பழந்தமிழர்களின் கட்டடக்கலை மரபு புதிய கற்காலம், பெருங்கற்காலத்தில் தொடங்கி கோயில்களாக வளர்ந்து வந்த விதம், ஆறு அங்கங்களுடன் அமையும் கோயில் விமானம், அதன் உறுப்புகள், தளங்களின் அமைப்பு, இஸ்லாமிய, கிறித்துவ, ஜைன மத கட்டடக்கலை ஆகியவற்றை படங்கள் மூலம் விளக்கினார். பின்பு கல்லூரியிலிருந்து மரபுநடைப் பயணமாக குற்றாலநாதர் கோயில், சித்திரசபைக்கு மாணவியர் அழைத்துச் செல்லப்பட்டனர்.