மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வடபழஞ்சி கிராமத்தில் கரோனா வைரஸ் சிகிச்சைக்காக ஆயிரம் படுக்கைகளுடன் நவீன வசதிகள் கொண்ட கரோனா சிகிச்சை நல மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதனை மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் வினய் தலைமையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார், கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பார்வையிட்டனர்.
பின்னர் செய்தியாளர்களை கூட்டாக இரு அமைச்சருகளும் சந்தித்தனர். இதில் பேசிய அமைச்சர் ஆர் பி உதயகுமார், “நோய் தொற்றிலிருந்து தமிழ்நாடு மக்களை காப்பாற்றுவதற்கு மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. சிகிச்சைக்குப் பின் முழு குணம் அடைந்து வீட்டிற்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
மதுரை மாவட்டத்தை பொருத்தவரையில், வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோர் நலனை முன்னிட்டு ஐந்து நல மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்சமயம் மதுரை மாவட்டம் வடபழஞ்சியில் மூன்று அடுக்குகளைக் கொண்டுள்ள, இந்த அடுக்கு மாடி வளாகத்தில் 800 நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற்றுக் கொள்வதற்கான வசதிகள் உள்ளன.