தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை கீழடி அகழாய்வுத் தளத்தில் 2018ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து தற்போது வரை ஐந்து கட்டங்களாக அகழாய்வு மேற்கொண்டு வருகிறது. தமிழர்களின் பண்பாட்டின் முக்கியத்துவம் மற்றும் தொன்மையை நிரூபிக்கவும், அதை உலகளவில் கொண்டு செல்லவும் தொல்லியல் துறை உலகப் புகழ்பெற்ற அறிவியல் ஆய்வகங்களுக்கு கீழடியில் கண்டெடுக்கப்பட்ட முக்கியமான கண்டுபிடிப்புகளை அனுப்பி அதிகாரப்பூர்வமான முடிவுகளைப் பெற்றுள்ளது.
கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட மாதிரிகளின் அறிவியல் காலக்கணிப்பு கி.மு. ஆறாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வைகை ஆற்றங்கரையில் நகரமயமாக்கல் இருந்ததை உறுதிப்படுத்தியது. மேலும், கங்கைச் சமவெளியின் நகரமயமாக்கலுக்கு சமகாலமானது என்பதையும் உறுதிபடுத்தியுள்ளது. கி.மு. ஆறாம் நூற்றாண்டில் தமிழ்ச் சமூகம் கல்வியறிவும் எழுத்தறிவும் பெற்றிருந்தனர்.
கீழடி அகழாய்வில் 1000-க்கும் மேற்பட்ட குறியீடுகளும், 60-க்கும் மேற்பட்ட தமிழ் எழுத்துப் பொறிப்புக் கொண்ட பானை ஓடுகளும் கண்டெக்கப்பட்டுள்ளன. இப்பானை ஓடுகளில் குவிரன் ஆதன், ஆதன் போன்ற தனிநபர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளதன் வாயிலாக சமுதாயத்தின் பல்வேறு பிரிவினரும் கல்வியறிவு பெற்றிருந்தனர் என்பது அறியப்படுகிறது.
தற்போது கிடைக்கப்பெற்றுள்ள தரவுகள் மற்றும் மற்றும் கண்டுபிடிப்புகளின் வாயிலாக வைகை ஆற்றங்கரையில் வாழ்ந்த தமிழ்ச் சமூகமானது வேளாண்மை மூலம் பொருளாதாரத்தினை உயர்த்திக் கொண்டனர், மட்கலன்கள், இரும்பு, நெசவு, மணிகள், சங்கு வளையல்கள் ஆகிய தொழில்களை மேற்கொண்டிருந்தனர் என்பதும் அகழாய்வுச் சான்றுகள் மூலம் அறிகிறோம்.
மகாராஷ்டிரம் மற்றும் குஜராத் பகுதிகளில் கிடைக்கப்பெறுகின்ற மூலக்கற்களைக் கொண்டு சூதுபவள மணிகள், அகேட் போன்ற கல்மணிகள் செய்யப்பட்டுள்ளன. அப்பகுதியுடன் கொண்டிருந்த வணிகத் தொடர்பைக் காட்டுகின்றது. அதுபோல, கங்கைச் சமவெளியைச் சார்ந்த கி.மு. ஐந்தாம் நூற்றாண்டுக்கு முந்தைய வெள்ளி முத்திரைக் காசுகள் கிடைப்பதின் மூலம் கங்கைச் சமவெளியுடன் வணிகப் பரிமாற்றம் நடைபெற்றுள்ளதை உறுதிசெய்ய முடிகிறது. மேலும், ரோம் நாட்டுடன் கொண்டிருந்த வணிகத் தொடர்புக்கு நாட்டு நாணயங்களும், ரோம் நாட்டு ரௌலட்டட் மற்றும் அரிட்டன் ஓடுகளும் வலுசேர்க்கின்றன.
கீழடியில் கிடைக்கப்பெற்ற தொல்பொருட்கள் நகர நாகரிகத்திற்கான கூறுகளை வெளிப்படுத்தியுள்ளது. பண்டைத் தமிழ்ச் சமூகம் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் எழுத்தறிவு பெற்றும், நகர நாகரிகத்துடனும் மேம்பட்ட தமிழ்ச் சமூகமாகவும் விளங்கியதை கீழடி அகழாய்வு முடிவுகள் வாயிலாக அறிவியல் பூர்வமாக தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை நிலை நிறுத்தியுள்ளது.
கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்கள் உலகத் தமிழர்கள் பொதுமக்கள் கண்டு களிக்கும் வகையில் இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் 31ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 18.43 கோடி ரூபாய் செலவில் கீழடி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தில், மதுரையும் கீழடியும், வேளாண்மையும் நீர் மேலாண்மையும், ஆடையும் அணிகலன்களும், கடல்வழி வணிகம், வாழ்வியல் எனும் ஆறு பொருண்மைகள் அடிப்படையில் தனித்தனி கட்டடங்களில் தொல்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.