தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“ஏழிசை மன்னர்” டி.எம்.சௌந்தரராஜன் சிலையை திறந்து வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்!

பின்னணிப் பாடகர் “கலைமாமணி” டி.எம்.சௌந்தரராஜன் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மதுரை மாநகரில் அமைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவச் சிலையினை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

c m stalin
டி.எம்.சௌந்தரராஜன் சிலையை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின்

By

Published : Aug 16, 2023, 11:01 PM IST

டி.எம்.சௌந்தரராஜன் சிலையை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின்

மதுரை:தமிழ் திரைப்பட பின்னணிப் பாடகர் “கலைமாமணி” டி.எம்.சௌந்தரராஜன் 1923ஆம் ஆண்டு மதுரையில் பிறந்தார். தனது இளம் வயதிலேயே இசை பயிற்சி பெற்று 1950ஆம் ஆண்டு முதல் அரை நூற்றாண்டு காலம் தமிழ்த் திரையுலகில் சிறப்புமிக்க பாடகராக மக்களின் அன்பையும், ஆதரவையும் பெற்றுத் திகழ்ந்தார். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி தமிழ்நாட்டு மக்களால் டி.எம்.எஸ் என்று அன்போடு அழைக்கப்பட்டவர்.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, இவருக்கு “ஏழிசை மன்னர்” என்ற பட்டத்தை சூட்டினார். மேலும், கடந்த 1974- 1975ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருதும், 2003ஆம் ஆண்டு பத்மஸ்ரீ பட்டமும் பெற்றார். திரைப்பாடல்கள் மட்டுமின்றி, ஏராளமான பக்திப் பாடல்களையும் பாடி, தன் குரல் வளத்தால் உலகமெங்கும் உள்ள தமிழர்களின் வாழ்வோடு கலந்திருந்த டி.எம்.சௌந்தரராஜன் கடந்த 2013, மே 5 அன்று காலமானார்.

பின்னணிப் பாடகர் “கலைமாமணி” டி.எம்.சௌந்தரராஜன் புகழுக்கு சிறப்பு சேர்க்கின்ற வகையில், அவரது நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, சென்னையில் அவர் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள மந்தைவெளி மேற்கு வட்டச் சாலைக்கு, “டி.எம்.சௌந்தரராஜன் சாலை” என்று கடந்த மார்ச் 27 அன்று தமிழ்நாடு முதலமைச்சரால் பெயரிடப்பட்டது.

மேலும், 2023-2024ஆம் ஆண்டிற்கான செய்தி மற்றும் விளம்பரத் துறை மானியக் கோரிக்கையில், பின்னணிப் பாடகர் டி.எம். சௌந்தரராஜன் நூற்றாண்டு விழாவினையொட்டி அவரது புகழை சிறப்பிக்கும் வகையில் மதுரை மாநகரில் அவரது திருவுருவச் சிலை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பிற்கிணங்க, மதுரை, முனிச்சாலை சந்திப்பில் உள்ள மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள “கலைமாமணி” டி.எம்.சௌந்தரராஜன் திருவுருவச் சிலையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்து, அங்கு வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதற்கு டி.எம். சௌந்தரராஜன் குடும்பத்தார் நன்றி தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், நிதி, மின்சாரம் மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:10,000 சுய உதவிக் குழுக்களை உருவாக்க ரூ.15 கோடி ஒதுக்கீடு - முதலமைச்சர் அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details