மதுரை:'ஒரு நூலகம் திறக்கப்படும்போது சிறைச்சாலை ஒன்று மூடப்படும்' என்பதை வெறுமனே பொன்மொழியாகக் கடக்க முடியாது என்பதைத்தான், காந்தி 'தனக்கு நூல்களையே பரிசாகத் தாருங்கள்' என்று கேட்டதோடு பொருத்திப் பார்க்கலாம். நூல்கள் அந்த அளவிற்கு மிக வலிமையானவை.
இதனைக் கருத்திற்கொண்டே நாடு விடுதலை பெற்ற முதலாவது ஆண்டிலேயே தமிழ்நாடு பொது நூலகச் சட்டம் 1948 இயற்றப்பட்டு, தமிழ்நாடு முழுவதும் நூலகங்கள் திறக்கப்பட்டன. இவற்றின் சேவையை அதிகரிப்பதற்காக கடந்த 1972ஆம் ஆண்டு பொது நூலக இயக்கம் உருவாக்கப்பட்டது. இதன் அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட நூலக ஆணைக்குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, நூலகங்களின் தரம் மேம்படுத்தப்பட்டன.
மாவட்ட மைய நூலகங்கள் 32, கிளை நூலகங்கள் 1926, நடமாடும் நூலகங்கள் 14, கிராமப்புற நூலகங்கள் 1915, பகுதி நேர நூலகங்கள் 745, கன்னிமாரா நூலகம், அண்ணா நூற்றாண்டு நூலகம் ஆகியவற்றுடன் ஜூலை 15ஆம் தேதி திறப்பு விழா காணவுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகம் ஆகியவையும் சேர்த்து மொத்தம் 4,635 நூலகங்கள் தமிழ்நாடு முழுவதும் இயங்கி வருகின்றன.
மேலும், சில மாவட்டங்களில் பாரம்பரியமிக்க தனியார் நூலகங்களும் உள்ளன. நூலகங்கள் எந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தவையோ, அந்த அளவிற்கு அந்நூலகங்களை ஒழுங்குபடுத்தி, நெறிப்படுத்தும் நூலகர்களின் பங்கும் அளப்பரியது.
கிளை நூலகர்களுக்கு இணையான எண்ணிக்கையைக் கொண்டு விளங்கும் கிராமப்புற நூலகர்களின் பணி இதுவரை கண்டு கொள்ளப்படாமல் உள்ளது என்பதோடு, வெறும் ரூ.14 ஆயிரம் ஊதியத்தில் நூலகப்பணி செய்து வரும் இவர்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் அனைத்தும் கிணற்றில் போடப்பட்ட கல்லாகக் கிடக்கின்றன எனவும் குற்றம் சாட்டுகின்றனர்.
கடந்த 12 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த ஊர்ப்புற நூலகர் ஒருவர் ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்திகளுக்கு அளித்த சிறப்பு பேட்டியில், "கடந்த 2012ஆம் ஆண்டு முதல் ஊர்ப்புற நூலகராக பணியாற்றி வருகிறேன். தமிழ்நாடு பொதுநூலகத் துறையில் முதல் நிலை நூலகம், 2ஆம் நிலை நூலகர், 3ஆம் நிலை நூலகர் என்பவை நிரந்தரமான அரசுப் பணிகளாகும்.
ஆனால், தமிழ்நாடு முழுவதும் கிராமப்புற நூலகர் (வில்லேஜ் லைப்ரேரியன்) என்ற பதவியின் கீழ் 1,512 பேர் பணியாற்றி வருகின்றனர். இதுவரை நாங்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. அரசு ஊழியர்களுக்கென்ற பணி விதிகள் இருந்தால்தான் அவை நிரந்தரப் பணியாகக் கருதப்படும் என்கிறார்கள்.
கடந்த 2008ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் ஊர்ப்புற நுலகர்களுக்கும் பணி விதிகளை உருவாக்கி தமிழ்நாடு அரசு நிரந்தரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கிறேன். கடந்த 2012ஆம் ஆண்டு மாதம் 5 ஆயிரம் ரூபாயில் பணிக்குச் சேர்ந்த நான், தற்போது 13 ஆயிரத்து 800 ரூபாயை ஊதியமாகப் பெறுகிறேன்.
எங்களது வாழ்வாதாரம் மிகவும் கேள்விக்குரியதாக உள்ளது. குடும்பத்தை நடத்தக்கூடிய செலவுக்குக் கூட பணமில்லாமல் மிகவும் வறுமையில் வாடிக் கொண்டிருக்கிறோம். வரையறுக்கப்படாத பணியிடம் என்று எங்களது நூலகப்பணி ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் 48 ஊர்ப்புற நூலகர்கள் பணியின்போது மரணத்தை தழுவியுள்ளனர்.
தற்போதுள்ள ஊர்ப்புற நூலகர்களில் 70 விழுக்காட்டிற்கும் மேல் 50 வயதைக் கடந்தவர்களாவர். எங்களுக்கு எந்த விதமான அரசாங்க சலுகைகளும் கிடையாது. பணி ஓய்வு பெற்ற பின்னர் மருத்துவச் செலவுக்கும் கூட பணமின்றி மிகவும் சிரமப்படும் நிலை. காரணம், பழைய பென்சன், புதிய பென்சன் என எதுவும் கிடையாது. நூலகப் பணிக்கே உரிய ஆஸ்துமா உள்ளிட்ட மூச்சுக்குழல் சார்ந்த நோய்களால் பலர் அவதிப்படுகின்றனர்.