விருதுநகர் ஆணைக்குழாய் அருகே உள்ள மேலத்தெருவைச் சேர்ந்த முத்தையா - காளீஸ்வரி தம்பதியினரின் மகன் மணிகண்டன் (28) இவருக்கும் திருமங்கலம் அடுத்த கப்பலூர் சுங்கச்சாவடி அருகே உள்ள காந்தி நகரைச் சேர்ந்த சிவக்குமார் - சித்ராதேவி தம்பதியினரின் மூன்றாவது மகள் ஜோதிலெட்சுமிக்கும் (21) கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான நிலையில், இவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தையும் ஒன்று உள்ளார்.
சொந்தமாக நிதி நிறுவனம் நடத்தி வந்த மணிகண்டன், அந்தத் தொழிலில் நஷ்டத்தை சந்தித்ததால் மகளிர் குழுவிற்கு ஏஜெண்டாக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஜோதிலட்சுமி பெற்றோர்கள் இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்தில் அவரது தந்தை சிவகுமார் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனால் பெற்றோருக்கு உதவியாக ஜோதிலட்சுமி தனது மகளுடன் காந்தி நகருக்கு வந்துள்ளார்.
இதையடுத்து ஜோதிலட்சுமி தனியாக இருந்ததால், மருத்துவமனைக்கு சென்று வர உதவுவதாகச் சொல்லி கப்பலூர் செல்வலட்சுமி நகரை சேர்ந்த கார்த்திக் (24) என்பவர் துணையாக இருந்துள்ளார். இவர்கள் இருவரும் அடிக்கடி மருத்துவமனைக்கு சென்று வந்த நிலையில், ஜோதிலட்சுமி வீட்டில் தனியாக இருந்ததை பயன்படுத்தி அவருடன் கார்த்திக் நட்பாக பழகி வந்துள்ளார்.
நாளடைவில் அந்த நட்பு காதலாக மாற இருவரும் அடிக்கடி ஜோதிலட்சுமியின் வீட்டில் தனிமையில் இருந்துள்ளனர். இதையடுத்து ஜோதிலட்சுமியின் பெற்றோர்கள் சிகிச்சை முடித்து வீட்டுக்கு வந்த பின்னர், அவர் மீண்டும் தனது கணவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு சென்ற பின்னரும் அவர் கார்த்திக்கை அடிக்கடி செல்ஃபோனில் தொடர்பு கொண்டு பேசி வந்ததாக கூறப்படுகிறது.
இது மணிகண்டனுக்கு தெரியவர கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. தகராறு முற்றிய நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கணவனுடன் சண்டையிட்டுக் கைக்குழந்தையுடன் ஜோதிலட்சுமி பெற்றோர் வீட்டிற்கு வந்துவிட்டார்.
இந்த சம்யத்தில் கடந்த திங்கட்கிழமை காலை கார்த்திக், அவரது நண்பர் ஒருவருடன் விருதுநகரிலுள்ள மணிகண்டன் வீட்டிற்கு வந்து, உங்கள் இருவரையும் சமாதானம் செய்துவைக்க ஜோதிலட்சுமியின் தாயார் அழைத்து வரச்சொன்னார் எனக்கூறி மணிகண்டனை இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்துள்ளார்.