உலக தொல்லியல் வாரம் நவம்பர் 19ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி பல்வேறு பகுதிகளிலும் இந்திய தொல்லியல்துறை சார்பில் கருத்தரங்கங்கள், புகைப்படக் கண்காட்சிகள் நடத்தப்பட்டுவருகின்றன.
இந்நிலையில் மதுரை உலக தமிழ்ச் சங்க வளாகத்தில் திருச்சி மண்டல இந்திய தொல்லியல் ஆய்வுதுறை சார்பில் புகைப்படக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதனை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் நேரில் பார்வையிட்டு தொல்லியல்துறை அலுவலர்களிடம் அகழாய்வுகள் குறித்தும் கேட்டறிந்தனர்.
கண்காட்சியில் தூத்துக்குடி மாவட்டம் கொற்கையில் 1968ஆம் தொடங்கிய அகழாய்வு முதல் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற கீழடி அகழாய்வு வரை என 40 இடங்களில் நடைபெற்ற அகழாய்வில் கிடைக்கப் பெற்ற 300க்கும் மேற்பட்ட பழங்கால தொல்லியல் பொருள்கள் இடம்பெற்றிருந்தன. இதனை தொல்லியல்துறை மாணவர்கள், ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.
இதனைத் தொடர்ந்து விழாவில் பேசிய நீதிபதி கிருபாகரன், ''நம் பண்பாடு மற்றும் தொன்மையை மறந்து வேற்று நாடுகளின் பண்பாடு மீது ஈர்ப்பு வந்துவிட்டது. அந்த எண்ணம் மாற வேண்டும், பழமையை காக்க வேண்டுமே தவிர அழிக்கக்கூடாது. தாய்மொழியை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வது தான் பண்பாடு. 2500 ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழ் மக்கள் கல்வியில் சிறந்தவர்களாக வாழ்ந்துள்ளனர் என்பதற்கு கீழடி அகழாய்வு சாட்சியாக அமைந்துள்ளது.
கீழடி ஆய்வுக்கு பின்பு தான் தொல்லியல் பற்றி மக்கள் அறிய தொடங்கியுள்ளனர். பழமையும், பண்பும் மறந்து போய்விட்டதற்கு முதியோர் இல்லங்கள் அதிகரிப்பே ஆதாரம். ஒவ்வொரு கி்ராமங்களிலும் தொல்லியல் ஆதாரங்கள் இருக்கும். அதனை அழிக்காமல் பாதுகாக்க வேண்டும், மத சின்னங்களையும் அழிவில் இருந்து பாதுகாக்க வேண்டும், தொல்லியல் சின்னங்களை மதமாச்சரியம் இல்லாமல் பாதுகாக்க வேண்டும்.