மதுரை மாநகராட்சியின் சீர்மிகு நகரத் (ஸ்மார்ட் சிட்டி) திட்டத்தின் கீழ் தமுக்கம் மைதானத்தில் மதுரை மாநாட்டு மையம் மற்றும் மீனாட்சியம்மன் கோயில் அருகில் பன்னடுக்கு வாகன நிறுத்துமிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட தமுக்கம் மைதானத்தில் சீர்மிகு நகரத் திட்டத்தின் (ஸ்மார்ட் சிட்டி) கீழ் ரூ.47.72 கோடி செலவில் மதுரை மாநாட்டு மையம் கட்டப்பட்டுள்ளது. தமுக்கம் மைதானத்தில் மொத்தமுள்ள 9.68 ஏக்கர் பரப்பரளவில், சுமார் 2.47 ஏக்கர் பரப்பளவில் இம்மாநாட்டு மையம் தரைமட்டத்திற்கு கீழ் ஒரு தளம் மற்றும் தரைதளம் ஆகியவற்றை கொண்டதாக கட்டப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டு மையம், அனைத்து அடிப்படை வசதிகளுடன் தொழில் மற்றும் வர்த்தக பொருட்காட்சி நடத்துவதற்கும், கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும், சுமார் 200 முதல் 3,500 நபர்கள் வரை பங்கு கொள்ளும் வகையிலும், பல்வேறு அளவுகளில் உள்அரங்கத்தினை மாற்றி அமைக்கும் வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. மேலும், தரைமட்டத்திற்கு கீழுள்ள தளத்தில் 234 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 357 இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் வாகன நிறுத்துமிடமும் அமைக்கப்பட்டுள்ளது.
நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம்
மதுரை மீனாட்சியம்மன் கோயில் அருகில் மாநகராட்சிக்கு சொந்தமான பழைய சென்ட்ரல் மார்க்கெட் பகுதியில் ரூ.41.96 கோடி செலவில் நவீன வசதிகளுடன் இரண்டு அடித்தளங்கள் கொண்ட பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் கட்டப்பட்டுள்ளது. இதில், 110 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 1,401 இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையிலும், தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் சுற்றுலா பயணிகளுக்கான தகவல் மையமும், புராதனச் சின்னங்கள் விற்பனை செய்யும் அங்காடி மையமும் கட்டப்பட்டுள்ளன.