மதுரை:தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று(மே.21) திறந்து வைத்த கரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் முதல் கட்டமாக 200 படுக்கைகள் பயன்பாட்டிற்கு வருகிறது.
கரோனா இரண்டாவது அலையின் தீவிரப் பரவல் காரணமாக, மதுரையில் அரசு, தனியார் மருத்துவமனைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன.
கரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு போதுமான படுக்கைகள் கிடைக்காத நிலையில், மதுரை தோப்பூர் நெஞ்சக நோய் சிகிச்சைப் பிரிவு மருத்துவமனை வளாகத்தில் தற்காலிக கரோனா சிறப்பு சிகிச்சை மையம் உருவாக்கப்பட்டுள்ளது.
தோப்பூர் கரோனா சிகிச்சை மையம்! இந்த சிகிச்சை மையத்தில், ஆக்ஸிஜன், ஆவி பிடிக்கும் கோப்பைகள் உள்ளிட்ட வசதிகளோடு 500 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று(மே.21) திறந்து வைத்து பார்வையிட்டார்.
முதல் கட்டமாக, 200 படுக்கைகள் கொண்ட சிகிச்சை மையம் இன்று(மே.21) முதல் பயன்பாட்டிற்கு வருகிறது. இதன் மூலம் நோயால் பாதிக்கப்படும் நபர்கள் உயிரிழக்கும் சூழல் தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோன்று நோயாளிகளுக்குத் தரமான சிகிச்சை வசதியும் கிடைக்கும் எனவும், மதுரை மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வருமானவரி தாக்கல்: அவகாசம் நீட்டிப்பு