திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பரசுராமன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், ”தமிழ்நாடு அரசுப் பள்ளிக்கல்வித் துறை சார்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு பயிற்சியளிக்கும் வகையில் நீட் பயிற்சி வகுப்பு தமிழ்நாடு முழுவதும் 412 இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. அதில், 100 மையங்கள் தொடக்கம் முதல் செயல்பட்டு வருவதால் மீதமுள்ள 312 இடங்கள் நீட் பயிற்சி மையம் அமைக்கும் பணி நடைபெற்றது. நீட் பயிற்சி மையத்திற்கான ஆசிரியர், கணினிப் பொருட்கள் என அனைத்து வசதிகளுக்கும் அரசு சார்பில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடையநல்லூரில் உள்ள நீட் பயிற்சி மையத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற 7 ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டனர் என்று போலி தகவலை ஒப்படைத்து பள்ளி தலைமையாசிரியர் பண மோசடி செய்துள்ளார். ஆனால் அவ்வாறு ஆசிரியர்கள் யாரும் பணியமர்த்தப்படவில்லை. இதுகுறித்து, தகவல் உரிமை சட்டத்தின் மூலம் தகவல் பெற்றும் முறையான சான்று அதில் இல்லை. பண மோசடி குறித்து மனு அளித்து தலைமையாசிரியர் மீது இன்று வரை நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால், வறுமையில் பின்தங்கிய நல்ல மதிப்பெண்கள் பெற்ற பல மாணவர்கள் நீட் தேர்வு தோல்வியினால் தவறான முடிவுக்கு வருகின்றனர். எனவே, பண மோசடியில் ஈடுபட்ட தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பள்ளிக்கல்வித் துறை இணை இயக்குநருக்கு உத்தரவிட வேண்டும்” என அம்மனுவில் குறிப்பிட்டிருந்தார்.