தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மகளுக்காக நீதிமன்றத்தை அணுகிய தாய்: வழக்கை விரைந்து முடிக்க சிபிசிஐடிக்கு உத்தரவு! - தஞ்சாவூர் செய்திகள்

மதுரை: தனது மகளுக்கு நீதி வேண்டி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நிர்வாக நீதிபதியை தாய் ஒருவர் அணுகிய வழக்கில், வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றியும் மூன்று மாதத்தில் வழக்கின் விசாரணையை முடித்து, தொடர்புடைய நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யவும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Chennai high court Madurai bench

By

Published : Oct 22, 2019, 9:51 PM IST

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரைச் சேர்ந்த சரண்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நிர்வாக நீதிபதி சசிதரனுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.

அதில், "எனது கணவர் இறந்துவிட்டார். எனக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். எனது மகள் திருப்புவனம் பகுதியிலுள்ள கார்த்திக் என்பவரது ஜவுளிக்கடையில், கடந்த மூன்று ஆண்டாக பணிபுரிந்துவந்தார். கார்த்திக்கின் நண்பர் சின்னப்பா என்பவர், கடந்தாண்டு நவம்பர் 7ஆம் தேதியன்று தீபாவளி விருந்து எனக்கூறி, அவரது வீட்டிற்கு எனது மகளை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றார். அன்று மதியம் மூன்று மணிக்கு வீடுதிரும்பிய எனது மகள், மயக்க நிலையில் இருந்ததோடு, அவருக்கு அதிக உதிரப்போக்கும் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தபோது அவர் பாலியல் வல்லுறவு செய்யபட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறினர்.

இது குறித்து கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நான் அளித்த புகாரின்பேரில் சின்னப்பா கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்தில் ஜவுளிக்கடை உரிமையாளர் கார்த்திக் உள்பட பலருக்கும் தொடர்பிருக்கலாமென சந்தேகமுள்ளது. ஆனால், சந்தேகத்திற்குரிய மற்றவர்கள்மீது எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.

இது குறித்து, காவல்துறை கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் புகார் செய்தும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இதில் சம்பந்தப்பட்டுள்ள பிற குற்றவாளிகள் பணபலம் மிக்கவர்கள். எனவே என் மகளுக்கு உரிய நீதி கிடைக்க, அனைத்து குற்றாவளிகளையும் கைது செய்து, உரிய தண்டனை வழங்க உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

சரண்யா தன் மகளின் நலனை முன்னிட்டு எழுதிய இந்தக் கடிதத்தின் அடிப்படையில், நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கினை விசாரணைக்கு எடுத்தது. இந்நிலையில், இன்று நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ். சுந்தர் அமர்வு, இந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றியும், இன்றிலிருந்து மூன்று மாதத்தில் இந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடி முடித்து, தொடர்புடைய நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

மேலும் இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சரண்யா, அவரது மகள் இருவருக்கும், ஏற்கனவே இரண்டு லட்ச ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ள நிலையில், மேலும் மூன்று லட்ச ரூபாய் இழப்பீடாக வழங்குமாறு அரசுக்கு உத்தரவிட்டும் வழக்கை முடித்துவைத்தனர்.

இதையும் படிங்க:

விதிகளை மீறி கட்டப்பட்ட வளைவுகளை நீக்குக -உயர் நீதிமன்றம் அதிரடி...

ABOUT THE AUTHOR

...view details