மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கடைக்காரர்கள் சங்கத்தின் தலைவர் ராஜீநகலூ என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல்செய்தார்.
அதில், "மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் வளாகத்தின் உள்ளே 115 கடைகள் செயல்பட்டுவருகின்றன. இதில் 22 கடைகள் பூ விற்பனையும், மற்ற கடைகள் மஞ்சள், குங்குமம், பூஜை பொருள்கள், புத்தகங்கள், ஜூவல்லரி ஆகிய விற்பனையும் செய்துவருகின்றன.
கடந்த 2018ஆம் ஆண்டு மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் நடைபெற்ற தீ விபத்தின் காரணமாக 40 கடைகளுக்கும் மேல் தீயில் முழுவதுமாக சேதமடைந்தன. தீ விபத்து நடைபெற்று 8 மாதங்களுக்குப் பின்பு 75 கடைகள் மட்டும் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
அதன்பின்பு கரோனா நோய்த்தொற்றின் காரணமாக மீண்டும் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. 2020 செப்டம்பரில் கடைகள் திறப்பதற்குத் தமிழ்நாடு அரசு அனுமதி அளித்தும் கோயில் நிர்வாகத்தின் சார்பாக கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை.
2021 ஜனவரி 14ஆம் தேதி கோயில் நிர்வாகத்தின் சார்பாக அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. இதன்படி, நிலையான வழிகாட்டு நடைமுறையின்படி (Standard Operating Procedure) கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோயிலின் உள்ளே செயல்படும் கடைகளும் திறக்கப்பட்ட நிலையில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலின் உள்ளே உள்ள கடைகள் மட்டும் திறக்கப்படாமல் உள்ளது ஏற்கத்தக்கதல்ல. எனவே கோயில் நிர்வாகம் சார்பாக 14 ஜனவரி 2021ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிவிப்பை ரத்துசெய்து உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மீனாட்சி அம்மன் கோயில் சார்பாக சிற்பங்களைச் சுற்றி கடைகள் அமைப்பது சரியாக இருக்காது என வாதிடப்பட்டது.
அப்போது நீதிபதி நிலையான வழிகாட்டு நடைமுறைகள் (Standard Operating Procedure) எத்தனை நாள் பின்பற்றப்படும் எனவும், சிற்பங்கள் மறையாமல் கடைகளை மீண்டும் திறப்பதற்கு வழிமுறைகள் உள்ளதா எனக் கேள்வி எழுப்பினர்.
மேலும் வழக்கு குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் நிர்வாகம் சார்பாக பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிப்ரவரி 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.