ராமநாதபுரத்தைச் சேர்ந்த திருமுருகன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொது நல மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில், "ஜனவரி 3ஆம் தேதி கோவிட் -19 தடுப்பூசிகளின், கட்டுப்பாடுடன் கூடிய அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி அளித்தது. இந்தியாவில் சீரம் நிறுவனம் கோவிசீல்டு எனும் பெயரிலும் பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் எனும் பெயரிலும் தடுப்பூசிகளை விற்பனை செய்ய உள்ளன. தடுப்பூசிகள் தொடர்பாக நடைபெற்ற இரண்டாம், மூன்றாம் கட்ட பரிசோதனையின், இடைக்கால அறிக்கையின் அடிப்படையில் அவசர அனுமதி அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஒருபுறம் சோதனை நடைபெறும் சூழலில் மறுபுறம் அவசர நிலையைக் கருத்தில் கொண்டு குறிப்பிட்ட மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவை பொறுத்தவரை 1,600 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பது மிகவும் குறைவான அளவு. கடந்த 4ஆம் தேதி தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலர் வெளியிட்ட செய்தி குறிப்பில், தமிழ்நாட்டில் முதல் கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் என, 6 லட்சம் முன்களப் பணியாளர்களுக்கு செலுத்தப்படும்.