தஞ்சையைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் தஞ்சை பள்ளி அக்ரஹாரம் பேருந்து நிலையம் அருகே டாஸ்மாக் கடை அமைக்க இருப்பதை எதிர்த்து நடவடிக்கை எடுக்கக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில், டாஸ்மாக் அமையவுள்ள இடத்தில் மெட்ரிகுலேஷன் பள்ளியும், பெருமாள் கோயிலும் அமைந்துள்ளன.
இங்கு டாஸ்மாக் கடை அமைந்தால் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள், பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் என அனைவருக்கும் இடையூறாக இருக்கிறது. ஆகவே, பள்ளி, அக்ரஹாரம், பேருந்து நிலையம் அருகே டாஸ்மாக் கடை அமைக்க தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், இவ்வழக்கு நீதிபதிகள் பிரபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்விடம் விசாரணைக்கு வந்தது. அப்போது, டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் தரப்பில் அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது. இதையடுத்து, டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் அறிக்கை ஏற்கத்தக்கதல்ல. தமிழக அரசு தரப்பிலிருந்து உரிய பதில் அளிக்க வேண்டும். டாஸ்மாக்கை மூடினால் வரும் வருவாய் இழப்பை ஈடுசெய்ய வரிகளை உருவாக்குதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசிடம் திட்டம் ஏதும் உள்ளதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும், அரசு எடுக்கும் முடிவுகள் மக்கள் நலன் சார்ந்ததாக இருக்க வேண்டும் என்றும் இதுகுறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு இவ்வழக்கை ஏப்ரல் 23ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.