திண்டுக்கல் உதவி ஆணையர் அலுவலகத்தில் உதவியாளராகப் பணிபுரிந்து வருபவர், முத்துப்பாண்டி. இவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், "நான் மாநில வணிகவரி அலுவலகத்தில் உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறேன். கடந்த 12.03.2022அன்று என்னை தேனி வணிகவரி அலுவலகத்தில் இருந்து, சிவகங்கை அலுவலகத்திற்கு மாற்றினர்.
அதன் பின் உள்நோக்கத்துடன், 28.03.2022 தேதியிட்ட ஆணை மூலம் நான் மீண்டும் போடிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டேன். அடுத்த 3 நாட்களுக்குள், மீண்டும் எனது பணியிடமாற்றம் ரத்து செய்யப்பட்டது. நான் மீண்டும் சிவகங்கை அலுவலகத்திற்கு 01.04.2022அன்று பணியிட மாற்றம் செய்யப்பட்டேன்.
அதன்பிறகு அந்த உத்தரவு வந்த ஒரு மாதத்திற்குள், மீண்டும் திண்டுக்கல் டவுன் சர்க்கிள் அலுவலகத்திற்கு மாற்றப்பட்டேன். 04.05.2022 தேதியிட்ட உத்தரவின்படி, மறு உத்தரவு வரும் வரை போடியில் பணிபுரிய வேண்டும் என்று தற்போது கூறப்பட்டிருந்தது. ஆனால் 30.05.2022அன்று, நான் மீண்டும் திண்டுக்கல்லுக்கு மாற்றப்பட்டேன்.
16.06.2022அன்று மீண்டும் சிவகங்கை அலுவலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளேன். 3 மாதங்களுக்குள் 5-க்கும் மேற்பட்ட பணியிட மாறுதல் பெற்றுள்ளேன். நிர்வாகக் காரணங்களுக்காக, இடமாற்ற உத்தரவு வழங்கப்பட்டுள்ளது என கூறுகின்றனர். இதனால் ஈடு செய்ய முடியாத இழப்புகளுக்கும், கஷ்டங்களுக்கும் ஆளாகியுள்ளேன்.
3 மாதங்களுக்குள் 5க்கும் மேற்பட்ட பணியிட மாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளது சட்டவிரோதம். எனவே, 16.06.2022. அன்று எனது இடமாறுதல் தொடர்பாக, வணிக வரித்துறை இணை ஆணையர் பிறப்பித்த இடமாறுதல் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ரமேஷ் முன்பு இன்று (ஜூன் 28) விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, “3 மாதங்களுக்குள் எந்த காரணமும் இல்லாமல் 5க்கும் மேல் பணியிட மாற்றம் செய்து ஏன்? மேலும் 16.06.2022 அன்று மீண்டும் சிவகங்கை அலுவலகத்திற்கு மாற்றப்பட்டதாக வணிக வரித்துறை இணை ஆணையர் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது” என உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:லோன் செயலியால் இளைஞர் தற்கொலை: பணம் செலுத்தாததால் நிர்வாணப்படம் வெளியிட்டு மிரட்டிய நிர்வாகிகள்