மதுரை: மதுரையில் கிராம ஊராட்சி துப்புரவுப் பணியாளர்களின் உரிமை மீட்பு மாநாடு, மதுரை கே.கே. நகரிலுள்ள கிருஷ்ணய்யர் சமுதாயக் கூடத்தில் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று திரைப்பட இயக்குநர் அமீர் பேசினார். மாநாட்டில் அவர் பேசியதாவது; இந்த மாநாடை சுயமரியாதை மீட்பு மாநாடாகவே நான் பார்க்கிறேன். பெரியார் உயிரோடு இருந்திருந்தால் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் ஒற்றுமையான இந்த மாநாட்டை மிகவும் வியந்து பாராட்டியிருப்பார்.
உலகத்தில் எத்தனையோ தொழில்கள் உள்ளன. ஆனால் தாங்கள் செய்கின்ற தொழிலை சொல்வதற்குக் கூச்சப்படுபவர்கள் தூய்மைப் பணியாளர்கள். காரணம் அந்தத் தொழிலின் இழிவு. டிஜிட்டல் இந்தியாவில் மாட்டின் காம்பிலிருந்து பால் கறப்பதற்குக் கூட இயந்திரம் கண்டுபிடித்துவிட்டான். சப்பாத்தி பிசைய, தோசை மாவு ஊற்றுவதற்கெல்லாம் கருவி கண்டுபிடித்தாயிற்று. ஆனால், கையால் மலம் அள்ளுவதற்கு மட்டும் இதுவரை மாற்று கண்டுபிடிக்கவில்லை. காரணம் சாதியக் கட்டமைப்பை அவ்வாறே வைத்திருப்பதுதான் இவர்களின் நோக்கம் என்றார்.
இந்து மதத்தின் அடிப்படை மனுதர்மம்
ஆதித்தமிழர் கட்சியின் நிறுவனர் ஜக்கையன் நிகழ்வில் பேசுகையில், "துப்புரவுப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களின் குழந்தைகள் பள்ளி, கல்லூரிகளில் படுகின்ற அவமானங்கள் சொல்லிமாளாதது. இந்தத்தொழிலுடன் சாதியும் பின்னிப் பிணைந்திருக்கின்ற காரணத்தாலேயே சமூக ஒடுக்குமுறைக்கு இத்தொழில்புரிபவர்கள் ஆளாக நேரிடுகிறது. கோயில் கருவறையில் மணியடிக்கக்கூடிய பிராமணரைத் தாண்டி, பிற சாதியர் உள்ளே நுழைய முடிவதில்லை. ஆனால், கழிவறையில் பணியாற்றுவதற்கு பிற சாதியர் யாரும் முன்வருவதில்லை. இதுதான் இந்த சாதியக் கட்டமைப்பின் வெற்றி. இந்த வேலையை இந்த சாதிதான் செய்ய வேண்டும் என்று தீர்மானிக்கின்ற மனுதர்மம்தான், இந்து மதத்தின் அடிப்படையாக உள்ளது" என்றார்.