தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அழகர்கோயில் ஆடித்தேரோட்டம் - பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

மதுரை அழகர்கோயில் ஆடித்தேரோட்ட திருவிழாவில் பெருந்திரளான மக்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்தனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Aug 1, 2023, 5:34 PM IST

மதுரை அழகர்கோயில் ஆடித்தேரோட்ட திருவிழா

மதுரை: அழகர்கோயில் கள்ளழகரின் திருவிழாக்களில் சித்திரைப் பெருவிழாவுக்கு அடுத்து தனிச்சிறப்பு வாய்ந்தது ஆடித்தேரோட்ட விழா. இக்கோயிலின் ஆடித்திருவிழாவுக்கான கொடியேற்றம் கடந்த ஜூலை 24ஆம் நாள் அன்று நடைபெற்றது. விழாவின் ஒன்பதாம் நாளான இன்று ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது.

இவ்விழாவில் பெரும்பான்மையாக கிராமப்புற மக்கள் பங்கேற்பது வழக்கம். மலையை ஒட்டியுள்ள காட்டுப்பகுதியில் இக்கோயில் அமைந்திருப்பதால், அதன் பாதுகாப்பு நோக்கில் இம்மக்களோடு கோவிலுக்கு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டிருக்கிறது.

தேரோட்டத்தில் குறிப்பிடத்தக்க அம்சம்: தேரை இழுக்கும் பணி கோயிலுக்கு கிழக்கிலும் தெற்கிலும் உள்ள சில கிராமத்தின் பரம்பரை மரபாகவும் வழக்கமாகவும் உள்ளது. அவர்களே இன்றளவும் தேரை இழுக்கிறார்கள். தேர் இழுப்பதை மரியாதைக்குரிய உரிமையாகவே கருதுகிறார்கள்.

தேரின் முதல் வடத்தை வெள்ளியங்குன்றம் ஜமீன்தாரின் ஆளுகைக்கு உட்பட்ட கிராமத்தைச் சேர்ந்தவர்கள் இழுப்பார்கள். தேங்காய் உடைத்து தேரோட்டத்தை துவங்கி வைத்து, முதல் வடத்துக்கான மரியாதையை வெள்ளியங்குன்றம் ஜமீன்தார் பெற்றுக்கொள்கிறார்.

வெள்ளியங்குன்றம் ஜமீன்: தேரோட்டம் துவங்கும் முன்னர் அனைத்து ஊரார்களும் இணைந்து மேள தாளம் முழங்க சென்று வெள்ளியங்குன்றம் ஜமீன்தாரை அழைத்து வருகின்றனர். அவர் வந்து தேரில் தேங்காய் உடைத்து தேரோட்ட விழாவை துவக்கி வைக்கிறார்.

வெள்ளியங்குன்றம் ஜமீன்தாருக்கு இந்த உரிமைகளை கி.பி.1659ஆம் ஆண்டு மதுரையை ஆண்ட திருமலை நாயக்க மன்னர் வழங்கி உள்ளதாக அவருக்கு அளித்துள்ள பட்டயத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

பிரசாதம்: தேர் இழுக்கும் ஒவ்வொரு வடத்தாருக்கும் கோவில் சார்பில் 60 படி அரிசி உணவுக்காக வழங்கப்படுகிறது.
நான்கு வடத்தாருக்கும் 8 முழம் உள்ள நாகமடிப்பட்டு கோயில் மரியாதையாக தரப்படுகிறது. ஜமீன்தார் வடத்தைச் சேர்ந்த மக்களுக்கு 5 தோசையும் 5 அரிசிப் பொங்கலும் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

தேரோட்டமும் பக்தர்களும்: தேரோடும் வீதியில் அழகர் மலையின் பின்னணியில் தேர் ஆடியசைந்து வரும் காட்சி பரவசமூட்டக்கூடியது. வீதியின் இருபுறமும் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வந்து தேரை இழுத்து, தரிசனம் செய்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இளைஞர்கள் துண்டு வீசி ஆடிப்பாடி விழாவைக் கொண்டாடினர். விழாவுக்காக தென்மாவட்டங்கள் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டி கட்டிக்கொண்டு வந்த ஆயிரக்கணக்கான மக்கள் கோவிலில் தங்கியிருந்து, கிடா வெட்டி விருந்து படைத்தனர்.

இதையும் படிங்க:பழனி மலைக்கோயில் கருவறை மூலவரை வீடியோ எடுத்த விவகாரம்; சிசிடிவி காட்சிகளை வெளியிட்ட கோயில் நிர்வாகம்!

ABOUT THE AUTHOR

...view details