தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 9, 2020, 12:07 PM IST

ETV Bharat / state

லாக்-அப் டார்ச்சர்... மகேந்திரன் மரணம் - காவலர்கள் மீது வழக்குப்பதிவு: விசாரணை செப். 21-க்கு ஒத்திவைப்பு!

மதுரை: சாத்தான்குளம் மகேந்திரன் மரண வழக்கில் சிபிசிஐடி சார்பாக சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், காவல் உதவி ஆய்வாளர் ரகுகணேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் அரசுத்தரப்பு தெரிவித்துள்ளது. இந்த வழக்கு விசாரணை செப்டம்பர் 21ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

MDU
MDU

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வடிவு என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றினைத் தாக்கல்செய்திருந்தார். அதில், "2020 மே 18ஆம் தேதி கொலை வழக்கொன்று தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அந்த வழக்கில் எனது மகன் துரைக்கு தொடர்பு இருப்பதாகக் கூறி காவல் உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் மே 22ஆம் தேதி எனது வீட்டிற்கு வந்து எனது மகன் துரை பற்றி விசாரித்தார்.

மே 23ஆம் தேதி அதிகாலை 2 மணி அளவில் எனது சகோதரி வீட்டிற்குச் சென்ற காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர் ரகுகணேஷ் ஆகியோர் எனது மகன் துரை இல்லாத நிலையில் இளையமகன் மகேந்திரனை அழைத்துச் சென்று கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

இரண்டு நாள்கள் சட்டவிரோத காவலில் வைத்து சித்ரவதை செய்துள்ளனர். இதனால் அவரது தலை உள்பட பல இடங்களில் காயம் ஏற்பட்ட நிலையில் மே 24ஆம் தேதி இரவு பத்து முப்பது மணி அளவில் அவரை விடுவித்தனர்.

ஏறத்தாழ சுயநினைவை இழக்கும் அளவிற்கு தாக்கப்பட்ட நிலையில் வசதி இல்லாத காரணத்தால் மகனை மருத்துவமனையில் அனுமதிக்கவில்லை. இந்நிலையில் உடல் நலம் மிகவும் மோசம் அடையவே, மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் ஜூன் 13ஆம் தேதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இது தொடர்பாக உயர் அலுவலர்களிடம் புகார் அளித்தால் நீதிமன்ற காவலில் இருக்கும் எனது மகன் துரையை விடுவிக்க மாட்டோம் என மிரட்டினர். அதனால் அஞ்சி எவ்வித புகாரும் அளிக்கவில்லை.

இதனிடையே சாத்தான்குளத்தில் தந்தை-மகன் உயிரிழந்த விவகாரத்தில் பல உண்மைகள் வெளிவந்திருக்கும் நிலையில் அதைத் தொடர்ந்து மூன்று கிராம பஞ்சாயத்து, ஊர் பெரியவர்களுடன் இணைந்து எனது மகன் இறப்பு குறித்து முறையாக விசாரித்து தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை கோரி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடமும், காவல் கண்காணிப்பாளரிடமும் மனு அளித்தும் தற்போதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை.

காவல் துறையினர் கடுமையாகத் தாக்கியதன் காரணமாகவே எனது மகன் மகேந்திரன் உயிரிழந்தான். ஆகவே எனது மகனின் இறப்பு குறித்து முறையாக விசாரிக்கவும் எனக்கு உரிய காவல் துறை பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

ஏற்கனவே வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி பொங்கியப்பன் முன்பு விசாரணைக்கு வந்தது.

தூத்துக்குடி சிபிசிஐடி துணைக் கண்காணிப்பாளர் சார்பாக நிலை அறிக்கை சீலிடப்பட்ட உறையில் தாக்கல்செய்யப்பட்டது. மேலும் சிபிசிஜடி தரப்பில் சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

அதற்கு நீதிபதி, "சிபிசிஜடி அறிக்கையில் மகேந்திரன் நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்துள்ளார் எனக் கூறப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

மனுதாரர் தரப்பில் மூத்த வழக்குரைஞர் முன்னிலையாக கால அவகாசம் கோரப்பட்டது. இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி வழக்கு விசாரணையை செப்டம்பர் 21ஆம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

ABOUT THE AUTHOR

...view details