ராமநாதபுரம் மாவட்டம், மோர்ப் பண்ணையைச் சேர்ந்த வழக்குரைஞர் தீரன் என்ற திருமுருகன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அதில், தேனி மாவட்டம் இயற்கையின் கொடையாக அதிக வனப் பகுதியைக் கொண்டதாகும். சுமார் 1.05 லட்சம் ஹெக்டேர் வனப் பகுதியில் மேகமலை வனப் பகுதியும் இதில் அடங்கியுள்ளது.
இந்தப் பகுதியில் உருவாகும் ஊற்று நீர் முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் நீரில் பெரும் பங்கை வகிக்கிறது. இந்த நீரை நம்பித்தான், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் உள்ளன. மேலும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில், உள்ள பெரியாறு புலிகள் சரணாலயம் அமைந்துள்ளன.
இப்பகுதியில் உள்ள சிலர் வியாபார நோக்கில் மலைமாடுகளை வளர்த்து வருகின்றனர். இந்த மாடுகளை வளர்ப்பதால் இவர்களுக்கு ஆயிரக்கணக்கில் லாபம் கிடைப்பதால், ஏராளமான மாடுகளை வளர்க்கின்றனர். இதேபோல் சிலர் ஆடு வகைகளையும் வளர்த்து வருகின்றனர்.
இவர்கள், இவற்றை மேகமலை வனப் பகுதியில் மேய்ச்சலுக்காக விடுகின்றனர். இவை மேகமலை வனப்பகுதியில் உள் பகுதிகள் வரை சென்று, புல், மரம் போன்றவற்றை அழித்து வருகின்றன. இதனால் வனப்பகுதிகள் அழிந்து வருகின்றன. இதனால் இப்பகுதியில் வசிக்கும் தாவர பட்சிணிகள் என்று அழைக்கப்படும் யானைகள், மான்களும், கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன. மேலும் புலிகள் போன்ற உயிரினங்களும் அருகே உள்ள கேரள வனப்பகுதிக்கு இடம்பெயருகின்றன.
எனவே ஒரு சிலரின் லாப நோக்கத்திற்காக வனப்பகுதி அழிவதுடன் மழை வளமும் பாதிக்கப்படுகின்றது. மேலும் வன உயிரினங்களும் பாதிக்கப்படுவதால், மேகமலை வனப்பகுதியில் இது போன்ற வளர்ப்பு வகை பிராணிகளை மேய்ச்சலுக்குச் செல்வதை முற்றிலுமாகத் தடுக்க வேண்டும்.