மதுரை:சட்டவிரோத மதுவிற்பனை, லாட்டரி மற்றும் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனை செய்யும் பெட்டிக்கடைகள் மீதும், விற்பனை செய்பவர்கள் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்கக்கோரி மதுரையைச் சேர்ந்த மணிகண்டன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், "திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மற்றும் புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் 24 மணி நேரமும் மதுபானம், கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களும், அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்களும் சாதாரணமாகக் கிடைக்கின்றன. குறிப்பாக பெட்டிக்கடைகளில் சட்ட விரோதமாகவும், காட்டு பகுதிகளிலும் இதுபோன்ற பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
வத்திப்பட்டி, லிங்கவாடி, செந்துறை, கொசுக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பெட்டிக்கடைகள் மூலமாக சர்வ சாதாரணமாக கஞ்சா, குட்கா, மதுபானம் மற்றும் சட்டவிரோத லாட்டரி விற்கப்படுகின்றன. இந்தப் பகுதிகளில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தொழிற்சாலைகள் உள்ளன. இந்த நிலையில், இங்குள்ள பள்ளிக் கல்லூரி மாணவர்களை குறிவைத்தும் இந்த போதைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
எனவே நத்தம் தாலுகா மற்றும் புறநகர் பகுதிகளில் சட்டவிரோத மதுவிற்பனை, லாட்டரி, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனை செய்யும் பெட்டிக்கடைகள் மீதும், விற்பனை செய்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" எனக் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.