மதுரை:தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரை சேர்ந்த செல்வகுமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில், "தமிழ், உலகின் மிக பழமையான மொழி. தமிழ்நாட்டில் 59 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இயங்கி வரும் சூழலில், ஒட்டுமொத்தமாக 1,228 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இந்தியாவில் செயல்பட்டு வருகின்றன. ஆனால் இந்தப் பள்ளிகளில் இந்தி பயிற்று மொழியாக உள்ளது.
இலவச கல்வி என்னும் பெயரில் மத்திய அரசு இந்தி மற்றும் சமஸ்கிருத மொழியை கட்டாயமாக்குவது போல் தெரிகிறது. கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 12 லட்சத்து 78 ஆயிரத்து 271 மாணவர்கள் பயிலும் சூழலில் 95 விழுக்காடு மாணவர்கள் இந்தி அல்லது சமஸ்கிருதம் தெரியாதவர்கள். அவர்களுக்கு சமஸ்கிருத பாடத்தை கட்டாயமாக்குவதும், இந்தி மொழியில் பயிற்றுவிப்பதும் அநீதியானது.
ஆகவே தமிழ்நாட்டில் இயங்கும் மத்திய அரசின் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் தமிழை கட்டாயப்பாடமாக்கவும், பயிற்று மொழியாக்கவும் உத்தரவிட வேண்டும். மேலும் மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள் எந்த மாநிலத்தில் இயங்குகிறதோ, அந்த மாநில மொழியை கட்டாயப்பாடமாக்கவும், பயிற்று மொழியாக்கவும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.