மதுரை: ராணுவ வீரர்கள் தேர்வில் முறையாக விதிமுறைகள் பின்பற்றவில்லை என தேர்வு முடிவுகளை ரத்து செய்யக் கோரிய வழக்கில், மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவிலுள்ள தகவல்கள் தவறாக உள்ளதாக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் உட்பட பலர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தனர். அதில், "கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி இந்திய ராணுவம் வெளியிட்ட ராணுவ வீரர்களுக்கான காலி பணியிடத்திற்கு அறிவிப்பு வெளியிட்டது. இதன் படி விண்ணப்பித்தோம், அனைத்து தகுதித் தேர்விலும் கலந்து கொண்டு உடற்தகுதி தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றோம்.
இதைத் தொடர்ந்து 2018 ஜூலை 29ஆம் தேதி வெளியிட்ட தேர்வு முடிவில் 22 நபர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு இருந்தனர். அதில், எங்களது பெயர் இடம் பெறவில்லை. இது தொடர்பாக, அதிகாரிகளிடம் கேட்டபோது, காலி இடங்கள் இல்லை என்று தெரிவித்தார். இதே போல், இந்திய ராணுவம் வெளியிட்ட அறிவிப்பாணையில் இந்த பதவிக்கு எத்தனை பேர் தேவை, எத்தனை பேர் தேர்வு செய்ய இருக்கிறார்கள் என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை.
இது சட்டவிரோதம். எனவே, இந்த அறிவிப்பாணையை ரத்து செய்துவிட்டு, விதிகளைப் பின்பற்றி முறையாக அறிவிப்பாணை வெளியிட்டு ராணுவ வீரர்களைத் தேர்வு செய்ய உத்தரவிட வேண்டும்" என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கின் முந்தைய விசாரணையில், மனுக்கள் குறித்து மத்திய பாதுகாப்புத் துறை செயலாளர், முதன்மை ராணுவ அதிகாரி உள்ளிட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு இன்று (செப்.27) நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.