தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீரேற்று நிலையம் அமைக்க தடைகோரிய வழக்கு: குடிநீர் வாரிய தலைவர் பதிலளிக்க உத்தரவு - காவேரி கூட்டு குடிநீர் திட்டம்

மதுரை: காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் அரசலூர் கிராமத்தில் பெரியளவில் ஆழ்துளை கிணறு அமைத்து நீரேற்று நிலையம் அமைக்கவிருக்கும் மாநில அரசின் திட்டத்திற்கு தடைகோரிய வழக்கில் தமிழ்நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரிய தலைவர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை
உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

By

Published : Jul 31, 2020, 12:22 AM IST

திருச்சி மாவட்டம், தொட்டியம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “தொட்டியம் தாலுக்காவின் பெரும்பான்மை பகுதி காவிரி ஆற்றுப் பகுதியில் அமைந்துள்ளது. விவசாயத்தை மட்டுமே தொழிலாகக் கொண்டு மக்கள் வாழ்கின்றனர். தற்போது காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் அரசலூர் கிராமத்தில் பெரிய அளவில் ஆழ்துளை கிணறு அமைத்து நீரேற்று நிலையம் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பாக அரசு அலுலவர்கள் கிராமத்தில் ஆய்வு செய்தபோது, கிராம மக்கள் ஆழ்துளை கிணறு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏற்கனவே, அரசலூர் கிராமத்தில் பல ஆழ்துளை கிணறுகள் உள்ளன என கிராம மக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பெரிய அளவில் ஆழ்துளை கிணறு அமைத்து நீரேற்று நிலையம் அமைப்பது தொடர்பாக அப்பகுதி கிராம மக்கள் மற்றும் விவசாய சங்கங்களுடன் அரசு அலுவலர்களின் அமைதிக் கூட்டம் நடைபெற்றது.

ஆனால், அதில் எவ்வித முடிவும் எட்டப்படவில்லை. மேலும் காவிரி ஆற்றுப் பகுதியில் அமைந்திருக்கும் கிராமங்களிலிருந்து நீரேற்று நிலையம் அமைத்தால் விவசாயம் பெருமளவில் பாதிக்கப்படும். பெரிய அளவில் ஆழ்துளை கிணறு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சம்பந்தப்பட்ட அரசு உயர் அலுவலர்களுக்கு பல முறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

எனவே இத்திட்டத்தில் அரசலூர் கிராமத்தில் பெரிய அளவில் ஆழ்துளை கிணறு அமைத்து நீரேற்று நிலையம் அமைக்க தடை விதித்து உத்தரவிட வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயனன், ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு குறித்து தமிழ்நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரிய தலைவர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details