கரூர் - கோயம்புத்தூர் சாலையில் அமைக்கப்பட உள்ள சிறிய பறக்கும் மேம்பாலம் பணிக்கு தடை கோரி விமல்நாத் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தார்.
பறக்கும் மேம்பாலப் பணிக்கு தடை கோரிய வழக்கு; நெடுஞ்சாலைத் துறை செயலாளர் பதிலளிக்க உத்தரவு! - மதுரை அண்மைச் செய்திகள்
மதுரை: கரூர் - கோயம்புத்தூர் சாலையில் அமைக்கப்பட உள்ள சிறிய பறக்கும் மேம்பாலம் பணிக்கு தடை கோரிய வழக்கில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை செயலாளர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது

அவர் அளித்துள்ள மனுவில், “ கரூர் - கோயம்புத்தூர் செல்லும் சாலையில் 584 மீட்டர் அளவிலான சிறிய பறக்கும் பாலம் இருசக்கர வாகனங்கள் செல்வதற்காக அமைக்கப்பட உள்ளது. இப்பகுதி மிகக்குறுகிய சாலையாக இருப்பால் சிறிய பறக்கும் பாலம் அமைப்பது தேவையற்றது. பாலம் அமைக்கப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், வாகனங்கள் நிறுத்துவதற்கான வசதிகள் இல்லாத நிலை ஏற்படும். மேலும் இங்கு செயல்படும் கடைகள் பலவற்றை அகற்ற வேண்டிய சூழ்நிலை உள்ளது. போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்றாமல், சிறிய பறக்கும் மேம்பாலம் அமைக்கும் பணியை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை தற்போது இரண்டு புதிய திட்டங்களை தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ளது. கரூர் பேருந்து நிலையம் மாற்றி அமைப்பது, புதிய ரிங் ரோடு அமைக்கும் பணி ஆகியன நடைபெற்று வருகிறது. இதனால் கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை போக்குவரத்து நெரிசல் பாதியாக குறைக்கப்படும். எனவே, கரூர் - கோயமுத்தூர் சாலையில் குறுகிய பறக்கும் மேம்பாலம் அமைக்க வேண்டியது தேவையற்றது. இது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மனு அளித்தும், அவர்கள் சிறிய பறக்கும் மேம்பாலம் அமைக்கும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.
எனவே கரூர் - கோயம்புத்தூர் செல்லும் சாலை இடையே சிறிய பறக்கும் மேம்பாலம் அமைக்கும் பணிக்கு இடைக்காலத் தடை விதிக்கவும். மேலும் பாலம் அமைக்கும் பணிக்கு தடை கோரி அனுப்பிய மனு குறித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார். இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இதுகுறித்து தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை செயலாளர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 4 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க : நாளை மறுநாள் முதலமைச்சராக பதவியேற்கிறார் மு.க. ஸ்டாலின்