மதுரை: ராமநாதபுரம் மாவட்டம் சூரங்கோட்டையைச் சேர்ந்த மருதுபாண்டியன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்தார்.
அதில், "தமிழ்நாட்டின் பல பகுதிகளில் சாலை பயன்பாட்டிற்கான நிலத்தை, வணிக கட்டிடங்களுக்கான நிலம் எனக்கூறி விற்பனை நடந்துள்ளது. இதுபோன்ற விபரங்கள் பொதுமக்களுக்கு வெளிப்படையாகத் தெரிவதில்லை. இதனால், பொதுமக்கள் நிலம் வாங்குவதில் ஏமாற்றப்படும் நிலை உள்ளது.
மாஸ்டர் பிளான் பற்றி தெரியாத நிலையில் பலரும் சுலபமாக நிலங்களை வகை மாற்றம் செய்து விற்கின்றனர். வழக்கமாக மாஸ்டர் பிளான் 10 ஆண்டுக்கு ஒரு முறை மாற்றம் செய்யப்படுகிறது. மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியாகச் செய்வதில்லை.
பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தவிர்த்திடும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள நகரங்களில் புதிதாக மாற்றியமைக்கப்பட்ட மாஸ்டர் பிளானை நகர் மற்றும் ஊரமைப்பு திட்டம், அரசின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யுமாறு உத்தரவிட வேண்டும் " எனக் கூறியிருந்தார்.
இந்த மனு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, மதுரை கிளை நிர்வாக நீதிபதி சிவஞானம் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
தமிழ்நாடு அரசு சார்பில் வாதிட்ட வழக்கறிஞர், தமிழ்நாட்டிலுள்ள நகரங்களில் புதிதாக மாற்றி அமைக்கப்பட்ட மாஸ்டர் பிளான் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டதாக தெரிவித்தார்.
இதனையடுத்து நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க:முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஜாமீன் வழக்கு: நாளை தீர்ப்பு!