மதுரையை சேர்ந்த பொன்குமார் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொது மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் தமிழகம் முழுவதும் செயல்பட்டு வருகின்றது. அதில் 1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலக்கூடிய மாணவ, மாணவிகளுக்கு தமிழ் மொழி கற்றுக் கொடுப்பதில்லை. தமிழ் மொழி என்பது முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளது.
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் கற்பிக்கக் கோரிய வழக்கு - நாளை ஒத்திவைப்பு! - உயர் நீதிமன்ற மதுரை கிளை
மதுரை: கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் விருப்ப பாடமாக தமிழ் உள்ளது என்பதை ஏற்க முடியாது. தமிழ் மொழி மட்டும் நாங்கள் கேட்கவில்லை. அனைத்து மாநில மொழிகளுக்கும் சேர்த்துதான் கேட்கிறோம் என கருத்து தெரிவித்த நீதிபதிகள், விரிவான உத்தரவிற்காக வழக்கு விசாரணையை நாளை ஒத்திவைத்தனர்.
தற்போதைய கல்வியாண்டு தொடங்கப்பட்டு மாணவர்கள் சேர்க்கையானது நடைபெற்று வருகிறது. எனவே கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழியை கட்டாய கல்வி மொழியாக ஆக்க வேண்டும். 1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கக்கூடிய மாணவர்களுக்கு முதல் மொழியாக தமிழ் மொழியை கற்றுக்கொடுக்க குறிப்பிட்ட காலத்திற்குள் வரையறை செய்ய வேண்டும். மேலும் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தமிழ் ஆசிரியர்களை நிரந்தரமாக நியமிக்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன் விசாரணை வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் 2006ஆம் ஆண்டு தமிழ்நாடு கல்வி சட்டத்தின்படி 1 முதல் 10 வகுப்பு வரை தமிழ் மொழி கட்டாயப் பாடம் என்று உள்ளது என வாதிடப்பட்டது.
மத்திய அரசு வழக்கறிஞர் கூறும் போது, கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் மத்திய அரசு ஊழியர்களுக்காக தொடங்கப்பட்டது. இங்கு படிக்கும் மாணவர்கள் 50% வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள். மேலும் விருப்ப படாமாக தமிழ் கற்பிக்கப்படுகிறது என்றார்.
அப்போது நீதிபதிகள், பிரதமர் தாய் மொழியை ஊக்கப்படுத்த வேண்டும் என கூறுகிறார். ஆனால், இந்தி, ஆங்கிலத்தை மட்டுமே படிக்க வேண்டும் என கட்டாயபடுத்துகின்றனர். கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் விருப்ப பாடமாக தமிழ் உள்ளது என்பதை ஏற்க முடியாது.
தமிழ் மொழி மட்டும் நாங்கள் கேட்கவில்லை. அனைத்து மாநில மொழிகளுக்கும் சேர்த்துதான் கேட்கிறோம். இப்படியே சென்றால் வரும் காலங்களில் தமிழ் மொழி தெரிந்திருந்தால் கேந்திரிய வித்யாலாயாவில் இடம் கிடைக்காது என்ற நிலை ஏற்பட வாய்ப்புள்ளது என்றனர். இதுகுறித்த விரிவான உத்தரவிற்காக வழக்கு விசாரணையை நாளை ஒத்திவைத்தனர்.