மதுரை:தூத்துக்குடியைச் சேர்ந்த பச்சை பெருமாள் என்பவர், தாமிரபரணி ஆற்றங்கரையிலிருந்து சட்டவிரோதமாக மணல் எடுப்பதைத் தடுப்பது குறித்து, உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், 'தாமிரபரணி ஆறு திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலுள்ள விவசாயத்திற்குத் தேவையான நீரை வழங்கி வருகிறது.
மேலும் தமிழ்நாடு அரசு, தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தாலுகா, ஸ்ரீபரங்குசநல்லூர் கிராமத்தில் செல்லக்கூடிய தாமிரபரணி ஆற்றின் குறுக்கே ரூபாய் 26 கோடி செலவில் தடுப்பணை கட்ட அனுமதி அளித்தது. அதற்கான வேலைகள் தொடங்கி, தற்போது நடைபெற்று வருகிறது.
23 செங்கல் சூளைகள் வைத்திருக்கும் நபர்கள் செய்யும் முறைகேடு
இந்நிலையில் தாமிரபரணி ஆற்றின் கரையோரங்களில் இருந்து சட்டவிரோதமாக மணல் எடுத்து, 23 செங்கல் சூளைகள் வைத்திருக்கும் நபர்கள், செங்கல் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கரையோரங்களில் மணல் அதிகப்படியாக எடுப்பதால், மழைக்காலங்களில் இப்பகுதியில் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, சட்டவிரோதமாக மணல் எடுத்து செங்கல் தயாரிப்பில் ஈடுபடுபவர்கள் குறித்து வழக்கறிஞர் ஆணையம் வைத்து விசாரணை செய்ய வேண்டும். மேலும் மணல் எடுத்து செங்கல் தயாரிப்பில் ஈடுபடுபவர்களைத் தடுப்பது குறித்த, எனது மனுவை பரிசீலனை செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' எனக் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் துரைசுவாமி, முரளிசங்கர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் வழக்கு குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நவம்பர் 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: 'சமுதாயத்திற்கு பயன்படும் ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம்' - அண்ணா பல்கலை துணைவேந்தர்